Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

12/09/2013

ஈழத்து இசை-நண்பன் ”ஜீசஸ்”இன் இசைப்பயணம்.

சில வருங்கால பிரபலங்கள் எமக்கு பக்கத்திலே எங்களோடு ஒருவனாய் கூடவே இருக்கலாம்.ஒன்றாக எங்களோடு ஊர் சுற்றித்திரியலாம். ஒன்றாக டீ கடையில் உட்கார்ந்து வாழ்க்கையை பற்றிப்பேசிக்கொண்டே டீ குடிக்கலாம். அந்த நபர் எங்கள் நண்பர்களாக இருக்கலாம்,உறவினர்களாக இருக்கலாம்.பக்கத்துவீட்டு பையனாக கூட இருக்கலாம். ஆனால் இந்த உண்மை புலப்பட பலருக்கு சில காலங்கள் எடுக்கலாம். சிலருக்கு ஒரு உள்ளுணர்வு சொல்லும் இவன் நாளைக்கு ஒரு கலக்கு கலக்குவான் என்று.

என் நண்பன் ஜீசஸை பார்க்கும் போது எனக்கு அப்படியான ஒரு உள்ளுணர்வு ஒன்று தட்டிச்செல்லும். அவன் என் நண்பன் என்று என் சட்டை காலரை தூக்கிச் சொல்லும் காலம் தொலைவில் இல்லை. இது ஒரு வகை சுயபுகழ்ச்சி போல இருக்கலாம். அவன் அவ்வளவு பெரிய அப்பாட்டாக்கரா என்று கேட்கலாம். எனக்கு மட்டும் தான் தெரியும் என் நண்பனின் பயணத்தின் வடுக்களும் வலிகளும். இந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இசை தான் வாழ்க்கை என்று சொல்லும் ஒரு இளைஞனை காண்பதே கடினம்.அப்படி எண்ணங்கள் இருந்தாலும் சொல்வதற்கு தயங்கலாம். எப்போதும் சமுகத்தின் வரையறைகளுக்கு கட்டுப்பட்டு இஞ்சினியர்,டாக்டர் கனவுகளுடன் வாழும் இளைஞர்கள் மத்தியில் இசையை தெரிவுசெய்த என் நண்பன் எனக்கு யதார்த்தமானவன். பலருக்கு விசித்திரமானவன்.  




எந்தவித இசைப்பின்னணியும் இல்லாமல் நான்கு நாட்கள் மட்டுமே ஒரு வாத்தியாரிடம் கீபோர்ட் கற்றுவிட்டு இன்று மெட்டமைத்து இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளனாய் என் நண்பன் மெருகேறியுள்ளான். ஆரம்பத்திலே விளையாட்டாக பக்கத்து சர்ச்சில் பயன்படுத்திய ஒரு மைக்கை  சிறு தடியில் கட்டி அதை ஒரு ஒரு பிளாஸ்டிக் கதிரையில் பொருத்தி வீட்டு ஹாலில் இருக்கும் ஒரு சிறு அறையில் வெள்ளைச்சீலை நான்குபுறமும் கட்டி ஒரு சிறிய ரெக்கார்டிங் தியேட்டர்(????) அமைத்திருந்தோம். அதை பயன்படுத்தி மிக குறைந்த தொழிநுட்பத்துடன் இரண்டு வருடங்களிற்கு முன்னர் சில பாடல்களை நண்பனின் இசையில் வெளியிட்டு இருந்தோம்.(அவை இப்போது நண்பனால் மீண்டும் மெருகேற்றப்பட்டுவருகின்றன) இப்படி ஆரம்பித்து படிப்படியாக பிழைகளை திருத்தி தரமான தொழிநுட்பத்துடன் “அடர்காட்டில் தானே” என்ற பாடல் நண்பனின் இசையில் வெளிவந்தது.இந்த பாடலின் இசைக்கு இன்னும் மெருகேற்றி அழகான வீடியோ பாடலாக ஹிமாலயா க்ரியேஷன்ஸ் வெளியிட்டனர். இந்த பாடல் யாழ்மண்ணிலிருந்து வெளிவந்த மிக தரமான பாடல்களில் ஒன்றாக அனைவராலும் பாராட்டப்பட்டது.இந்த பாடலுக்கு இலங்கையின் பிரபலான இசைக்கலைஞர்கள் தங்கள் பாராட்டுக்களை சமுக வலைத்தளங்களில் இட்டிருந்தனர்.

பாடல்- அடர்காட்டில் தானே
இசை-ஜீசஸ்
பாடல் வரிகள்- துவாரகன்
பாடி நடித்தவர்- நிஷாகரன்
ஒளிப்பதிவு&படத்தொகுப்பு-துஷிகரன்

பாடலை கேட்டு,பார்த்து ரசிக்க,

அடர் காட்டில் தானே -http://www.youtube.com/watch?v=I7WqGpE0cl0

நம் நாட்டு தமிழ் இசையை பொறுத்தவரை பலர் இசையமைக்கிறார்கள், பாடல் எழுதுகிறார்கள், பாடுகிறார்கள் ஆனால் ஒரு சிலரே அதை தொடர்ச்சியாக செய்கிறார்கள். பலரின் பயணம் இடையிலே தடைப்பட்டு விடும். என்ன தான் திறமையிருந்தாலும் சொந்த செலவில் ஒரு சில பாடல்கள் வெளியிடலாம்.தொடர்ந்து பாடல்கள் வெளியிடுவதற்கு ”பணத்திற்கு எங்கு போவது”? என்றொரு வினா எழ ஆரம்பித்ததும் எல்லாம் ஸ்தம்பிதமாகிவிடும். எனவே இப்பயணத்தில் பலர் இடைநடுவே தலைமறைவாகிவிடுகின்றனர். என்ன தான் கனவுகள் என்று சொல்லி பயணத்தை ஆரம்பித்தாலும் பணம் என்ற ஒரு பதார்த்தம் எல்லாவற்றையும் மூழ்கடித்துவிடும். கனவுகள் என்பது காசு உள்ளவனுக்கு மட்டுமே சாத்தியமானதொன்றாக உள்ளது.

ஆனால் என் நண்பன் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையுடன் தன் பயணத்தை தொடர்கிறான். தற்போது நண்பன் ஒரு இசை ஆல்பம் ஒன்றின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். மொத்தம் பத்து பாடல்கள் உள்ளடங்கலாக விரைவில் வெளிவர இருக்கிறது. அவன் பயணம் தொடரவேண்டும். அதற்கு நல்ல ரசிகர்கள்,நண்பர்கள்,ஊடகங்கள் ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.அந்த ஆல்பம் சிறப்பாக வெளிவந்து வெற்றிபெற நண்பர்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நண்பனுடன் தொடர்புகொள்ள,

MOBILE- +94779251911 or 0779251911

15/08/2013

மூன்று மொழி-மூன்று இசை

இசைக்கு மொழியில்லை,நிறமில்லை,மதமில்லை,ஜாதியில்லை.அதுபோல் அதை உணரும் நல்ல ரசிகனும் வேறுபாடுகளை களைந்தவனாகிறான். நல்ல இசைக்கு மொழி தேவையில்லை.இரண்டு செவிகள் போதும். நமக்கு பிடித்த,ரசித்த விசயங்களை அதை ரசிக்கும் நல்ல மனிதர்களுக்கு பகிரும் போது உண்டாகும் பூரிப்பு சொல்லில் அடங்காது. அதே போல நமக்கு பிடித்த நல்ல இசையை பகிர்தலும் இன்பம் தான்.அந்தவகையில் இன்றிலிருந்து வாரம் ஒரு முறை “மூன்று மொழி மூன்று இசை” எனும் தலைப்பில் நான் ரசித்த தமிழ், வேற்றுமொழிப்பாடல்கள் பற்றிப்பகிரலாமென இருக்கிறேன். இந்த பகுதியில் 2 வேற்று மொழிப்பாடல்களும் ஒரு வெளிவராத அல்லது அதிகம் பிரபலமாகாத மிகவும் ரசித்த தமிழ் பாடல் ஒன்றும் அடங்கியிருக்கும். முதலில் தமிழ்பாடல் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.



”இஞ்சாதே இஞ்சாதே”-நெடுஞ்சாலை(2013)

பாடியவர்கள்-மதுசிறீ,ரூப்குமார் ரத்தோட்,யாஷின்

பாடல் வரிகள்-மணி அமுதன்.


நான் அறிந்தவரையில் இதுவரைக்கும் ரூப்குமார் ரத்தோட் 3 தமிழ் பாடல்கள் பாடியுள்ளார். அவை மூன்றும் மிக பெரிய ஹிட் மெலோடிகள்.
1.வெண்மதி வெண்மதியே நில்லு
2.ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
3.பூக்கள் பூக்கும் தருணம் அந்த வரிசையில் இந்தப்பாடலும் நிச்சயம் இணைந்துகொள்ளும்.
எங்கேயும் எப்போதும்” ,”பொன்மாலைப்பொழுது” என்று தொடர்ச்சியான ஹிட் ஆல்பங்களை கொடுத்த சத்யாவின் அருமையான இசையில் வெளிவந்திருக்கிறதுரூப்குமாரின் குரலின் வீச்சம்,அதன் குழைவுகள்கேட்டவுடனேயே மயக்கும் தன்மை என்பன இவரின் பாடல்களில் அதிகமாக இருக்கும்.
மதுசிறீயின் குழந்தை தனமான கொஞ்சும் குரல்,யாஷினின் மலையாள வார்த்தை கோலங்கள் என்று மயக்குகிறது. ரூப்குமாரின் குரல் வரும் இடங்கள் அற்புதம். புதிய பாடலாசிரியர் மணி அமுதனின் வரிகளும் அருமை.


ANURAGA VILOCHANANAAYI”-NEELATHTHAAMARA(2009)-MALAYALAM

இசை-வித்யாசாகர்

பாடியவர்கள்-ஸ்ரேயா கோஷல்&ஸ்ரீகுமார்.


யூ ரியூப்பில் உலாவிக்கொண்டிருந்த சமயம் எதேச்சையாக தட்டுப்பட்ட பாடலிது.அதன் பிறகு இந்த பாடலோட மொத்த டீரெய்லும் கலக்ட் பண்ணியாச்சு.முதலில் இந்த மலையாளம் என்ற மொழியை கண்டுபிடிச்சவனுக்கு ஒரு சல்யூட்.மலையாளத்துக்கு “மெலோடியஸ் லாங்க்வேஜ்” அப்டின்னு ஒரு பேர நான் வெச்சுக்கிறன்.எவ்ளோ குழைவான மொழி.
இந்த பாடல் ஒன்றே அதற்கு சாட்சி சொல்லும்.2009 இல் வெளிவந்து கேரளா எங்கும் ஒலித்த பாடலிது.தமிழ் ரசிகர்களுக்கு இடையிடையே நல்ல தமிழ் மெலோடிகளை கொடுத்து விட்டு தலைமறைவாகும் மெலோடி கிங் வித்யாசாகர் தான் இசை.இதே படத்தில் பல்ராம் மற்றும் விஜய்பிரகாஷ் இணைந்து பாடிய PAKALONNU பாடலும் அருமை.
இந்த படத்தை இயக்கியவர் லால் ஜோஸ். இவரின் அனேக படங்களுக்கு வித்யாசாகர் சிறந்த இசை கொடுத்திருப்பார். இந்த படத்துக்கு சிறந்த இசைக்கான பிலிம்பேர் விருதை வித்யாசாகர் பெற்றுக்கொண்டதும் சிறப்பு. அண்மையில் வெளிவந்த “டயமண்ட் நெக்லஸ்” படத்தில் இடம்பெற்ற 
NILA MALARE-NIVAS பாடலும் இவர்களின் கூட்டணியில் வெளிவந்த ஒரு அழகான பாடல்.


O RANGREZZ”-BHAAG MILKA BHAAG(2013)-HINDI

இசை-ஷங்கர்,எஷான்,லாய்

பாடியவர்கள்-ஸ்ரேயா கோஷல்,ஜாவிட் பாஷிர்


ங்தே பசந்தி” படத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ராவின் இந்திய தடகள வீரர் மில்க்கா சிங்கின் வாழ்க்கை பற்றிய படம் தான்  
“BHAAG MILKA BHAAG”.இந்த பாடல் நம்ம சங்கர் மகாதேவன்,எஷான்,லாய் கூட்டணியில் செம்மையாக வந்திருக்கிறது.ஸ்ரேயா கோஷல் வழமை போல பின்னியிருக்கிறார்.பாடல் முழுதும் அசல் க்ளாசிக்கல் டச். 
நம்ம மசக்களி சோனம் கபூர்,பர்ஹான் அக்தர் தோன்றும் இந்தப்பாடலின் விஷுவல்ஸும் அப்டி இருக்கும் அண்மையில் வெளிவந்த ஹிந்தி பாடல்களில் மிகவும் பிடித்து போன பாடல்களில் இதுவுமொன்று. வழமையாக ராகேஷின் முன்னய படங்களுக்கு(ரங் தே பசந்தி,டெல்லி-6) தல ரஹ்மான் பிரம்மாண்டமான இசை கொடுத்திருப்பார்.இரண்டு படங்களுக்கும் ரஹ்மானுக்கு பிலிம்பேர் கிடைத்திருந்தது.ஆனால் இந்த படத்துக்கு ஷங்கர் எஷான் லாயை தெரிவு செய்திருந்தார். பாலிவூட்டில் பாடல்கள் சூப்பர் ஹிட். இவரோட அடுத்த படத்துக்கும் இவர்கள் தான் இசையமைக்கிறார்கள்.இதே படத்தில் இடம்பெற்ற ZINDA-BAAG MILKA BHAAG பாடலும் என்னோட பேவரீட்.




ணைந்திருப்போம் நல்ல இசையுடன் மீண்டும் சந்திப்போம்.
-ரோஷன் புவிராஜ்.









11/08/2013

இரண்டாம் உலகம்-ஹாரீஸின் இசை


காதல் கொண்டேன்,7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை என்று யுவனின் அட்டகாசமான இசையுடன் கைகோர்த்த செல்வராகவன், யுவனுடனான பிரிவுக்கு பின்னர் ஆயிரத்தில் ஒருவன்,மயக்கமென்ன படங்களில் ஜீ.வீ.பிரகாஷை தெரிவுசெய்திருந்தார்.இருப்பினும் செல்வாவும் யுவனும் மீண்டும் இணையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் இரண்டாம் உலகம் படத்துக்கு யுவன் இசையமைக்க இருப்பதாயும் சில தகவல்கள் இணையவுலகில் வலம்வந்திருந்தது. ஆனால் வைரமுத்து-ஹாரீஸ் கூட்டணியிலே இரண்டாம் உலகம் படம் ஆரம்பிக்கப்பட்டது. 

இரண்டாம் உலகம் பாடல்கள் வெளிவந்த பின்னர் ஹாரீஸ் “கிங் ஒஃப் ரொமான்ஸ்” என்று அழைக்கப்படுவார் என்று செல்வா சொன்னது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் துப்பாக்கி படத்துக்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரீஸ் இசையமைத்திருக்கும் படம் என்பாதால் என்னவோ ஒரிஜினல் மெலோடிகள் கொடுப்பதற்கு கொஞ்சம் மெனக்கட்டிருக்கிறார் மனிதர். ஹாரீஸுக்காக நீண்டகாலத்துபின்னர் மொத்த பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.




னி மொழியே”
பாடியவர்-கார்த்திக்.

கொஞ்சம் வில்லங்கமான பெயருள்ள பாடல் தான். கலைஞர் மேலுள்ள மரியாதையில் வைரமுத்து இப்படி பல்லவியை ஆரம்பித்து இருப்பாரோ என்னவோ.இப்டி சிந்திக்க வைத்தாலும் பாடல் கேட்டபின் ஒரு அணுவும் அசையாது என்பது போல் ஹாரீஸும் கார்த்துக்கும் நம்மை கட்டி போட்டுவிடுகிறார்கள். இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்தபாடல் இது.ஹாரீஸ் இசையில் கார்த்திக் பாடிய அவள் உலக அழகியே,ஒரு ஊரில் அழகே உருவாய்,விழி மூடி ஜோசித்தால்,ஹசிலி பிசிலி வரிசையில் இன்னொரு ஹிட் பாடல்.வழமையான ஹாரீஸ் கிட்டார் பின்னணிகள்,இடையிடையே புட்டிங்கில் பிளம்ஸ் போல பெண்குரல் கோரஸ்,தெளிவான நீரோடை போல குரல்,வரிகளை கொல்லாத இசை என்று இப்பாடலை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

-முத்தமா கேட்கிறேன் முறுவல் தான் கேட்கிறேன்.
-வலதுகால் எட்டுவை வாழ்க்கையை தொட்டுவை.

இரண்டு சரணங்களிலும் வரும் இந்த இரண்டு வரிகளையும் கார்த்திக் பாடும் இடம் அருமை.” வழமை போல வைரமுத்து கிளாஸ்.


ன்னவனே மன்னவனே”
பாடிவர்கள்-கோபால் ராவ்,ஷக்தி சிறீ கோபாலன்

பாடல் கிட்டாருடன் ஆரம்பிக்கும் போது வழமையான ஹாரீஸ் பாடல் என்று தோன்றவைத்தாலும் “மன்னவனே மன்னவனே” என்று வரிகளில் சப்ரைஸ் காத்திருக்க பாடல் கொஞ்சம் கிராமிய மெட்டோடு மேற்கத்திய இசையோடு பயணிக்க ஆரம்பிக்கும். நெஞ்சுக்குள்ளே,எங்க போனா ராசா என்று ரஹ்மானிடம் பாடிக்கொண்டிருந்த ஷக்திசிறீ கோபாலன் இப்பாடலுக்கு சரியான தெரிவு. இரண்டு இடைஇசைகளும் ஃப்லூட், பியானோ,வயலீன் இசைகளுடன் அழகாக கோர்க்கப்பட்டு இருக்கிறது. பாடலின் இடையே லைட்டா ஹாரீஸ் பாடல் ஒன்றின் தேஜா வூ பீலிங் வருவது எனக்கு மட்டுமா தெரியல. இந்த ஆல்பத்திலுள்ள இன்னுமொரு ஹிட் மெலோடி பாடல்.




ன் காதல் தீ”
பாடியவர்-எஸ்.பீ.பாலசுப்ரமணியம்.

இரண்டாம் உலகம் பாடல்களில் ஒரு மாஸ்டர் பீஸ் மெலோடி என்று சொல்லலாம். எஸ்.பீ,பீ இன் கம்பீரமான காதல் கொஞ்சும் குரல் அதற்கு மேல் கவிப்பேரரசின் வரிகள் கிளாசிக்கல் வாத்தியங்களின் பின்னணி இசை, பெண்குரல்களின் கோரஸ் என்றும் ஹாரீஸ் ஸ்டைலில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு மயக்குகிறது. முக்கியமாக இரண்டு இடையிசைகளும் அபாரம்.
இந்த பாடலில் வரும் சில வரிகள்.

”உடல்கள் இரண்டும் சேரும் முன் உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே”
“இதயம் இரண்டும் தூரம் தான் இதழ்கள் நான்கும் அருகில் தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே”

பாடும் நிலா பாடிய மலரே மெளனமா,காதல் ரோஜாவே வரிசையில் இந்த பாடலும் நிச்சயம் இடம்பெறும். பாடும் நிலாவை வைத்து இந்த ஜெனெரேஷன் இசை ரசிகர்களுக்கு ஒரு அழகான மெலோடியை கொடுத்த ஹாரீஸுக்கு நன்றிகள்.


விண்ணைத்தாண்டி அன்பே”
பாடியவர்-விஜய் பிரகாஷ்

வழமையான அக்மார்க் ஹாரீஸ் பாடல். கொஞ்சம் வேகமான எலக்ரானிக் இசையுடன் வானில் பயணிப்பது போல ஒரு உணர்வு. பாடலை கேட்கும் போது நிச்சயம் ஹாரீஸ் இசையில் விஜய் பிரகாஷ் பாடிய முன்னைய பாடல்கள் நினைவுக்கு வரும்.
“திசு அழிந்தாலும் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா”
கொஞ்சம் விஞ்ஞானமா வைரமுத்து கேள்விகேட்கிறார்.




ராக்கோழி ராக்கோழி”

பாடிவர்கள்-ஹரிஹரன்,சிறீராம்

இந்த பாடலிலும் ஒப்பனிங்குக்கும் பாடலுக்கும் இடையே பெரிய ஒரு இடைவேளை. வீரபாண்டிக்கோட்டையிலே பாடல் ஸ்டைலில் ஒரு பாடல்.இந்த பாடாலுக்கு அவ்வளவு மெனக்கட்டு இருக்கமாட்டார் ஹாரீஸ்.கொஞ்சம் ஆக்ரோஷமாக ஹரிஹரன் ஆரம்பிக்க சிறீராம் அதை பிக் ஆப் பண்ண பாடல் தொடரும் இரண்டு சரணங்களிலும் ஹரிகரனும்,சிறீராமும் பகிர்ந்து பாடியுள்ளனர். இரண்டு சரணங்களும் முடியும் இடங்களில் ஃபீல்  அருமை.


னங்கள்ளு விஷமுள்ள”
பாடியவர்-தனுஷ்

”வை திஸ் கொலவெறி”ன்னு எப்ப பாடினாரோ அன்னைக்கு ஆரம்பிச்ச கிக்ஸ்ரார்ட் இன்னும் ஓடிட்டு இருக்கு என்றால் தனுஷ் ஒரு அதிஷ்டசாலி என்று சொல்லமுடியாது. தனக்கேற்ற இலகுவான பாடல்களை தெரிவு செய்து ஒரு பாடகராக தன்னை நிருபித்து வருகிறார் சூப் பாய் தனுஷ். தனுஷும் ஹாரீஸும் இதுவரை எந்த படத்திலும் பணியாற்றவில்லை.இருந்தாலும் இந்த பாடல் மூலம் அந்த குறையை நிவர்த்திசெய்த்துள்ளனர்.வழமையாக தனுஷ் காதல் தோல்வி பையன்களுக்காக பாடுவார் இந்த பாடல் கல்யாணம் பண்ணி அவஸ்தைபடும் கணவர்களுக்கானதாக இருக்கும் என்று செல்வா கூறியிருந்தார். மொத்தத்தில் அஞ்சல,வேணாம் மச்சான் வேணாம் வரிசையில் ஹாரீஸ் ஸ்டைல் தனுஷ் பாடலிது.




ஹாரிஸ் மெலோடிகளில் சிரத்தையை காட்டியுள்ளார். சில பாடல்களில் எங்கேயே கேட்ட மயக்கம் என்ற வார்த்தையை தவிர்க்கமுடியவில்லை. இவற்றை திருத்திக்கொண்டால் ஹாரீஸ் ஹாலிவூட் பக்கம் ஒரு வலம் வரலாம். அப்புறம் அதையே தமிழ்ல போடலாம்.ஒட்டுமொத்தமா பார்த்தால் ஆல்பம் இரண்டாம் உலகம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கசெய்துள்ளது. நிச்சயம் ஒரு ஹிட் ஆல்பமாக கொள்ளப்படும். 

செல்வா-ஹாரீஸ் கூட்டணி இன்னுமொரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கு.

-ரோஷன் புவிராஜ்-

01/05/2013

ஆனந்த யாழை மீட்டும் யுவனின் தங்கமீன்கள் பாடல்கள்.



சில மாதங்களுக்கு முன்னர் ”கற்றதுதமிழ்” ராம் அவர்களின் “தங்கமீன்கள்” ட்ரெய்லர் வந்திருந்தது.அந்த ட்ரெய்லரில் வரும் உணர்ச்சிபூர்வமான வசனங்களையும் காட்சிகளையும் பார்த்தபோது அது ஒரு படத்துக்கான முன்னோட்டம் போல தெரியவில்லை.மூன்று நிமிடங்களில் ஏதோ ஒரு உணர்ச்சிபூர்வமான புது உலகில் பயணித்த மயக்கம். யூ ரியூப்பில் பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டும்,தங்கள் ஆதரவையும் வழங்கியிருந்தனர்.இந்த ட்ரெய்லருக்கு யூரியூப்பில் இடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களை பார்த்தபோது ஒரு படைப்பாளியால் எவ்வளவு தூரத்திற்கு ஒருவரின் மனதின் ஆழம் வரை செல்லலாம் என்பதை அறிந்துகொண்டேன். தங்கமீன்கள் படத்தின் ட்ரெய்லரில் ஆனந்தயாழை மீட்டுகிறாயடி” என்று ஒரு பாடல்வரும் அதைகேட்டதிலிருந்தே  பாடல்களுக்கு காத்திருக்க தொடங்கிவிட்டேன்.


அத்தோடு கற்றது தமிழ் ராம் அவர்களின் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இன்னொரு முகத்தை காணலாம் என்ற பூரணநம்பிக்கை இருந்தது. ராம்&யுவன் ஏற்கனவே “கற்றது தமிழ்” படத்தில் கைகோர்த்திருந்தனர்.கடந்த 10  ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான கற்றது தமிழ் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் உயிரோட்டமான பாடல்களும் படத்தை இன்னொரு படிமேல் கொண்டு சென்றது என்றால் மிகையாகாது. என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

இப்போதும் நா.முத்துகுமார் வரிகளில் “பறவையே எங்கு இருக்கிறாய்” .”பறபற பட்டாம்பூச்சி” “இன்னும் ஓர் இரவு”, “உனக்காக தானே” பாடல்களை கேட்கும் போது நெஞ்சம் கனக்கும்.நீண்டநாள் காத்திருப்பின் பின்னர் இன்று தங்கமீன்கள் பாடல்களை தரவிறக்கி கேட்டேன்.மிகவும் பிடித்துவிட்டது. இந்த ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்.இந்த பாடல்கள் அனைத்தையும் நா.முத்துகுமார் எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் இயக்குனர் ராம் அவர்களின் குரலில் உணர்ச்சிபூர்வமான வசனங்கள் வரும் அதன் பின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும்.

னந்த யாழை மீட்டுகிறாயடி”

பாடியவர்-சிறீராம் பார்த்தசாரதி
.
இயக்குனர் ராமின் குரலில்”மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை  என்று” என்ற அழகான வசனத்துடன் பாடல் ஆரம்பிக்கும்.
இந்த பாடலை பற்றி என்ன சொல்ல இந்த பதிவை எழுத தூண்டியதே இந்த பாடல் தான்.ஒரு பாடலில் உயிர் இருக்கிறது என்பார்கள்.அதை அறிந்திராதவர்கள் இந்த பாடலை கேளுங்கள்.இந்த பாடலை கேட்டு யுவன் என்னோட மகன் என்று இசைஞானி நிச்சயம் பெருமைப்படலாம்.
சிறீராம் பார்த்தசாரதி தமிழில் இடையிடையே தலைகாட்டிச்செல்லும் மிக திறமையான பாடகர்.ரஹ்மான் அவர்களால் “அதிசய திருமணம்” பாடல் மூலம் அறிமுகமாகி  ஏற்கனவே இளங்காத்து வீசுதே,சுட்டும் விழிச்சுடரே,வெண்பனியே,புதுமலர்த்தோட்டத்திலே போன்ற மிக பிரபலமான பாடல்களை பாடிவர். இந்த பாடல் மூலம் நிச்சயம் மறக்கமுடியாத பாடகராகிவிட்டார்.நா.முத்துகுமார் மீண்டுமொரு தடவை தன் பேனாவால் உணர்வுகளை கொட்டிசென்றுள்ளார்.ஒவ்வொரு வரிகளும் மிக அருமை.

 பாடல்வரிகள்:

னந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாயதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாசைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் மலையின் அழகோ தாங்கவில்லை
உந்த கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லையென்று தோன்றுதடி

தூரத்துமரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்தே பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லையென்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்....

உன்முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லையென்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.....


ஒரு தந்தை தன் மகளின் குழந்தைத்தனத்தை அவள் குறும்பில் கிடைக்கும் இன்பத்தை இதை விட வேறு எப்படி பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் பாடமுடியும்.
என்னைபொறுத்தவரை எனது கணிப்பில் இதுவரை வந்த பாடல்களில்  இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல் இது.



தி வெள்ளம்”

 பாடியவர்-ராகுல் நம்பியார்

”அப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள் மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்  ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை”
இவ்வாறு ராமி அவர்களின் குரலுடன் பாடல் தொடங்கும்.
ராகுல் நம்பியார் பாடியுள்ளார். இவர் ஏற்கனவே இதே கூட்டணியில் “கற்றது தமிழ்” படத்தில் “பற பற பட்டாம்பூச்சி” என்ற அழகான் பாடலை பாடியிருப்பார். பொதுவாக குத்துபாடல்களையே பாடும் ராகுல் நம்பியார் இப்படிப்பட்ட பாடல்களையும் பாடினால் நன்று.
தந்தை தன் மகளை பிரிந்து தவிக்கும் போது பாடும்பாடலாக அமைந்துள்ளது.
ஆனந்த யாழை மீட்டுகிறாயடி பாடலுக்கு அடுத்தபடியா என்னை கவர்ந்தது.
”அலைந்திடும் மேகம் அதை போல இந்த வாழ்க்கையே காற்றின் வழியில் போகின்றோம்.
கலைந்திடும் கோலம் என்ற போதிலும் அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்”
போன்ற வரிகள் வழமையான முத்துக்குமார் ரகமாயிருப்பினும்,
”மலரொன்று வீழ்ந்தால் அதை ஏந்த  பலர் ஓடுவார் இலைகள் வீழ்ந்தால் சருகாகும்.
வறியவன் வாழ்க்கை இலைபோல என்ற போதிலும் சருகுகள் ஒரு நாள் உரமாகும்”
போன்றவரிகள் அற்புதம். மேலும் பாடலின் இடையெ வரும் இடைஇசைகளும் மயக்கும்.

யாருக்கும் தோழன் இல்லை”

பாடியவர்-அல்போன்ஸ் ஜோசப்

“மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடகூடாது என்கிற வாழ்க்கையை தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்”என்ற வார்த்தைகளுடன் ஆரம்பிக்கும் பாடல்.ஆரோமலே பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் ஜோசப்பின் குரலில் அவருக்கேயுரிய பாணியில் இன்னொரு உருக்கமான பாடல். மகளின் விருப்பதை தீர்க்க முனையும் தந்தை ”சொன்ன தேதி சொன்னநேரம் உன்னை வந்து சேருவேன் இல்லையென்று ஆகும் போது என்னை நானே கொல்லுவேன்” பாடும்விதமாக 2.50 நிமிடம் ஒலிக்கிறது.

"First Last"

பாடியவர்கள்- பேபி சாதனா,பேபி சஞ்சனா

“அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஒரே இடம் பள்ளிக்கூடம் மட்டும் தான்” என்று ஆரம்பிக்கும் ஒரு ஜாலியான பாடல்.
இந்த பாடலை பாடிய பேபி சாதனா தான் இந்த தங்கமீன்களின் செல்ல மகள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த பாடலை கேட்கும் போது அழகி படத்தில் இடம்பெற்ற “டமக்கு டமக்கு டம்” பாடல் லைட்டாக வந்து போவதை தவிர்க்கமுடியவில்லை.பாடல் வரிகளை மிக குறும்பாக எழுதியுள்ளார் பாடலாசிரியர்.

யுவன் ஷங்கர் ராஜா அண்மைக்காலமாக மனதில் நிற்கும்படியான பாடல்களை  தருவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இசை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதற்கு “மூன்று பேர் மூன்று காதல்” இசை மூலம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திய யுவன் தங்கமீன்கள் பாடல்கள் மூலம் இன்னும் உயரம் சென்றுவிட்டார். பாடல்கள் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
தங்கமீன்களுக்காக காத்திருக்கும்,
வன் இரோஷன்.



10/01/2013

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை -பாகம்-2

இந்த தொடரின் முதல் பகுதியை வாசிக்க............


 ................."சிறுவன் திலிப்புக்கு  இலத்திரனியல் சாதனம் என்றால் கொள்ளை பிரியம்.15 வயதை அடைந்ததும் குடும்பப்பொறுப்புகள் காரணமாக தனது படிப்பை சரியாக தொடரமுடியவில்லை.சிறு சிறு வேலைகள் செய்தான்.தான் முதன் முதாலாக பெற்ற சம்பளம் 50 ரூபா என்றும் அது ஒரு ரெக்கோர்ட் பிளேயர் பழுதுபார்த்தற்கு கிடைத்தகாக ஒரு பேட்டியில் சொல்கிறார் ரஹ்மான். இலத்திரனியல் சாதனங்கள் மீதான உந்துதலே ரஹ்மானின் பாடல்கள் அதி உன்னத ஒலிநயத்துடன் வெளிவர வித்திட்டன. பதினெட்டு வயதாகியதும் அதிகாலையில் வீட்டைவிட்டு புறப்பட்டு ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றில் பணியாற்றி பின் மாலையில் இசைநிகழ்ச்சி பங்குபற்றிவருவான் திலீப். இடைநேரத்தில் பள்ளிப்படிப்பும் அரைகுறையாக சென்றது.இருப்பினும் திலீப்பின் வருமானம் அவர்களின் குடும்பத்தை கொண்டுசெலுத்த போதியதாயிருந்தது.

மனம் தளரவில்லை இசை தான் வாழ்க்கை என்று சிறு வயதிலே முடிவு செய்தமையால் படிப்பு பற்றி கவலைப்படவில்லை.மிகப்பெரிய உச்சத்தை அடையவேண்டும் என்றால் சில சிலவற்றை இழக்கவேண்டிவரும் அது ரஹ்மானின் வாழ்க்கையிலும் நடந்தது.ஆனாலும் பிற்காலத்தில் பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்யாவிடினும் இசைமூலமாக மியாமி பல்கலைகழகத்தால் டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்கப்பட்டார்.


வாய்ப்புகளை தேடி அலைந்தார்.அதன் விளைவாக இசைஞானி, எம்.எஸ்.வீ மற்றும் தெலுங்கு இசையமைப்பாளர் கோட்டி,ரமேஷ் நாயுடு ஆகியோரிடம் இசை உதவியாளராக பணியாற்றினார்.இதுவே பின்னர் படவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க முதலாக இருந்தது.மேலும் எம்.எஸ்.வீயே தனக்கு மிக பிடித்த இசையமைப்பாளர் என்றும் ரஹ்மான் கூறுகிறார்.சங்கமம் படத்தில் ”மழைத்துளி மழைத்துளி” பாடலையும்,கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ”விடைகொடு எங்கள் நாடே” பாடலையும் பாடவைத்தார்.



அதன் பின்னர்  ட்ரினிட்டி பல்கலைக்கழக இசைசம்பந்தமான உயர் படிப்பை கற்றார். பிரபல தபேலா இசைக்கலைஞர் ஷாகிர் ஹிஸைன்,குன்னக்குடி வைத்தியநாதன், சிவமணி ஆகியோருடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகள் வழங்கினார். ரஹ்மான் பிரதான கீ.போர்ட் கலைஞராகவும் ட்ரம்ஸ் வாத்தியகலைஞர் சிவமணி,ஜோன் ஆண்டனி,ரஹ்மானின் இசையில் பேட்டை ராப்,சிக்குபுக்கு ரயிலே உள்ளிட்ட பல பாடல்கள் பாடிய சுரேஷ்பீட்டர்,ஜோஜோ,ராஜா போன்ற நண்பர்களுடன் ROOTS என்னும் இசை குழுவொன்றை சில காலம் நடத்திவந்தார்.

இதற்கிடையில்திலீப்குமாரும் அவரது குடும்பத்தினரும் சொந்த விருப்பின் பேரில் 1989 ஆம் ஆண்டு இஸ்லாமிய மத்தை தழுவிகொண்டார்.இது தங்கள் உடனடி முடிவாக இருக்கவில்லையெனவும் 10 வருசமாக இதை பற்றி ஆலோசித்தே இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதாகவும் பின்னொருநாள் பேட்டியொன்றில் ரஹ்மான் கூறியுள்ளார். அத்தோடு மட்டுமில்லாது தீன் இசைமாலை என்னும் இஸ்லாமிய கீதங்கள் அடங்கிய இறுவெட்டு ஒன்றை திலீப்குமார் என்றபேரில் வெளியிட்டார்.

இப்பாடல்களை மனோ, சுஜாதா மற்றும் ரஹ்மானின் இனிய தோழர் ஷாகுல் ஹமீத் ஆகியோர் பாடினர்.ஷாகுல் ஹமீத் பின்னாளில் ரஹ்மானின் இசையில் ராசாத்தி என் உசிரு, செந்தமிழ்நாட்டு தமிழச்சியே,ஊர்வசி ஊர்வசி போன்ற் ஹிட் பாடல்களை பாடினார்.பின்னர் ஷாகுல் ஹ்மீத்தின் அகால மரணம் ரஹ்மானை பெரும் வேதனைக்குள்ளாக்கியது.இன்றும் ஷாகுல் ஹமீத்தின் குடும்பத்துனருக்கு உறுதுணையாக ரஹ்மான் உள்ளார்.அதன் பின் இஸ்லாமிய சம்பிரதாயங்களுக்கு ஏற்ப திலீப்குமார் தனது பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் என்று மாற்றி கொண்டார்.

 தீன் இசைமாலையில் ஹாகுல் ஹமீத் பாடிய இஸ்லாமிய பாடல் இது.



ட்ரினிட்டி பல்கைலைகழக மேற்படிப்பை முடித்துக்கொண்ட ரஹ்மான் தனது வீட்டிலே ஒரு ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை அமைத்து விளம்பரப்படங்களுக்கும், ஜிங்கில்ஸ் எனப்படும் குறு இசைகளையும் வழங்கிய வண்ணம் இருந்தார். ரஹ்மான் இந்திய இசையை தாண்டி சர்வதேச இசையை ரசிக்க தொடங்கினார்.
அதில் காணப்படும் நுட்பங்களை ஆராய்ந்தார்.பிரபல மேற்கத்திய கீபோர்ட் சரித்திரம் ஜானியே ரஹ்மானின் மானசீக குரு ஆவார்.அவரை போலவே தலைமுடி வளர்த்து அவரின் ஸ்டைலிலே பின்னாளில் மேடைநிகழ்ச்சிகளில் தோன்றினார்.

 
Yanni-Raimaker stage performace

மேலும் வெங்காலிஸ்,எனிக்மா,ஹான்ஸ் ஸிம்மர் போன்றோர் ரஹ்மானுக்கு மிகவும் பிடித்த மேற்கத்திய இசை கலைஞர்கள் ஆவர்.ரஹ்மானின் இசையில் மேற்கூறிய சரித்திரங்களின் அகத்தூண்டுதல் காணப்படும்.இவ்வாறு மிக புதிய பாதையில் தனது பயணத்தை முன்னோக்கி தொடர்ந்தவண்ணம் இருந்தார்.சரியான வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.இவ்வாறு தனது இசைபயணத்தின் ஆரம்பதளங்களை சரியாக உருவாக்கொண்டிருந்த சமயம் 1991 ஆம் ஆண்டின் தமிழில் சிறந்தவிளம்பர ஜிங்கிள்’க்கான விருதை லியோ கொஃபி விளம்பரத்துக்காக ரஹ்மானின் பெயர் அறிவிக்கப்பட்டது.அந்த விளம்பரபடத்தை இயக்கியிருந்தவர் ரஹ்மானின் நண்பரும் பின்னாளில்  மின்சாரகனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற அழகான படங்களை இயக்கியவரும் சிறந்தஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஆவார்.
                                                            Leo coffee ad-Rahman

ராஜீவ் மேனனின் அழைப்பின் பேரில் அவ்விருதுவழங்கும் விழாவுக்கு மணிரத்னம் வந்திருந்தார் அவ்விருதை ரஹ்மானுக்கு மணிரத்னமே வழங்கி கெளரவித்தார்..இதுவே பின்னாளில் இந்திய சினிமாவையையே புரட்டிப்போட்ட ஒரு கூட்டணி அமையகாரணமான ரஹ்மான்&மணிரத்னம் இடையிலான முதல் சந்திப்பு ஆகும்.அந்த விழா முடிந்த பிற்பாடு அந்த 25 வயது இளைஞனை மணிரத்னத்தின் உறவுக்காரப்பெண் ஷாரதா த்ரிலோக் மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் சிறுகாலம் ஷாரதா த்ரிலோக் இன் த்ரிஷ் ப்ரோடக்சன்ஸில் பணியாற்றினார் ரஹ்மான்.
அந்த சமயம் இயக்குனர் மணிரத்னம் இயக்குனர் பாலச்சந்தரின் “கவிதாலயா” நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்துக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்.மணிரத்னம்,பாலச்சந்தர் ஆகியோர் இதற்கு முன்னய படங்களுக்கு இசைஞானியையே பயன்படுத்தி பெருவெற்றி கண்டிருந்தனர். இருப்பினும் இசைஞானி இளையராஜாக்கும் மணிரத்னத்திற்கும் இடையே தளபதி படத்தின் பின்னர் பெரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தனர்.
இதேபோல புதுப்புது அர்த்தங்கள் படத்தின் பின்னர் பாலச்சந்தருக்கும் இசைஞானிக்கும் இடையே கருத்துவேறுபாடு முற்றி இருந்தது.
இதன் காரணமாக ரோஜா படத்துக்கு புதிய திறமையான ஒரு இசையமைப்பாளரை இசையமைக்கவைக்க திட்டமிருந்தார் மணிரத்னம்.

 மிகுதி அடுத்த பதிவில்.........

29/12/2012

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை-பாகம் 1

 (இலங்கை தமிழ் பிரதேசம் முழுதும் பிரதி ஞாயிறுகளில் வெளிவரும் தமிழ்த்தந்தி பத்திரிகைக்காக எழுதிவரும் "யார் ரஹ்மான்?" என்ற தொடரின் மாற்றம் பெற்ற வடிவமே இத்தொடர். இதன் மூன்று  பாகங்கள் இதுவரை தமிழ் தந்தி பத்திரிகையில் வெளிவந்துள்ளன.இச்சிந்தனையை தூண்டி வாய்ப்பளித்த  சுகந்தன் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.)


Add caption

சரித்திரங்கள் தானாக பிறப்பதில்லை அவை உருவாக்கப்படுகின்றன. ஒரே பாதையில் செல்லும் உலகை மாற்றி புதுமை படைப்பவனே சரித்திர நாயகனாக வரலாற்றில் இடம்பெறுகிறான்.அந்த வகையில் சிறந்த இசை மற்றும் பாடலுக்கான உலகின் தலைசிறந்த விருதான இரண்டு ஆஸ்கார்கள்,இரண்டு கிராம்மி விருதுகள்,தலா ஒவ்வொரு கோல்டன் க்லோப்,பஃப்டா விருதுகள் போன்ற உலக விருதுகளோடு இந்திய அரசின் நான்கு தேசியவிருதுகள்,தென்னிந்திய வட இந்திய சிறந்த இசைக்கான 28 பில்ம்ஃபேர் விருதுகள் உட்பட இசைக்கான 103 விருதுகள்,டைம் சஞ்சிகையின் அங்கீகாரம்,நோபல் மேடையில் இசைநிகழ்ச்சி,மியாமி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் இன்னும் எண்ணிலடங்கா சாதனைகள்  ஒரு இசைத்தமிழன் இவர். தாஜ்மகால் எப்படி இந்தியாவின் உலக அதிசயமோ அதே போல இவர் இந்தியாவின் இசை அதிசயம். இசைப்புயல்,ஆஸ்கார் நாயகன் என உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தியாவின் அடையாளம் ஏ,ஆர்.ரஹ்மானின் ஆரம்ப வாழ்க்கை பயணம் பற்றிய தேடலின் விழைச்சலே இந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை.





சரித்திரத்தில் இடம்பிடித்த ஒவ்வொரு மனிதனும் வெளியுலகிற்கு  முதன்முதலில் தெரியவரும் போது அக்கணத்தில் கேட்கப்பட்ட கேள்வி ”யார் இவன்”?.இதே போல இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்தின் பாடல்கள் வெளிவந்து தேசியவிருது பெற்று இந்திய திரை இசையையே புரட்டிப்போட்ட போது இந்தியா திரையுலகே பிரமிப்போடு கேட்ட கேள்வி யார் இந்த ரஹ்மான்? 2009 ஆம் ஆண்டு ஆஸ்கார் மேடையில் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று ஒரு மனிதன் சொல்லி இரண்டு விருதுகளை வாங்கிய போது இந்த உலகமே கேட்ட கேள்வி யார் இந்த ரஹ்மான்?இந்த இசைப்பிரவாகத்தின் ஆரம்பகாலம் எப்படியிருந்தது? என்னென்ன சவால்களை எதிர்கொண்டார்? எதையெதை இழந்தார்? இவ்வுச்சத்தை தொட என்னென்ன உந்துதலாக இருந்தது இசைப்புயலின் வாழ்க்கை கடிகாரத்தை கொஞ்சம் முன்னோகி திருப்பி பார்ப்போம்.




சேகர்,கஸ்தூரி(இப்போது கரிமா) தம்பதியினருக்கு 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி  பிறந்தார்.ரஹ்மானுக்கு மூன்று சகோதரிகள். பிரபல பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷின் தாயர் ரெஹ்ஹானா ரஹ்மானின் சொந்த தமக்கையாராவார்.ரஹ்மான் என்று பிற்காலத்தில் அறியப்பட்ட இச்சிறுவனின் இயற்பெயர் திலீப்குமார்.திலீப்பின்(ரஹ்மான்) தந்தை ஆர்.கே சேகர் ஒரு பிரபல மலையாள இசையமைப்பாளர்.





இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.1964ஆம் ஆண்டு பழசிராஜா என்னும் மலையாள படம் மூலம் திரையிசைக்கு அறிமுகமானார் சேகர்(பின்னர் இப்படம் அண்மையில் மெருகேற்றப்பட்டு மம்முட்டியின் நடிப்பில் வெளிவந்து இசைஞானி இளையராஜாக்கு தேசியவிருது பெற்றுகொடுத்து).இப்படத்தில் மொத்தமாக 12 பாடல்கள் இடம்பெற்று இருந்தன. அக்காலத்தில் ஜேசுதாஸ் பாடிய ”சொட்ட முதல் சுடல வாறே” என்ற பாடல் மிக பிரபலம்.

இந்த பாடலை கேட்டுபாருங்கள் மொழி புரியாவிடினும்  எவ்வளவு உணர்வுபூர்வமானதயிருக்கும்.



 




ரஹ்மானின் தந்தையாரே சிறந்த குருவாக இருந்து இசை கற்றுக்கொடுத்தார். சேகர் ஹார்மோனியம் வாசிப்பதில் வல்லவர். எனவே மகனுக்கு இசைநுணுக்கங்களை திறம்பட கற்றுக்கொடுத்தார்.திலீப் சிறுவனாக இருக்கும் போதே ஹார்மோனியக் கட்டைகளை துணியால் மூடிவிட்டு வாசித்து கலக்கினான். இந்த ஹார்மோனிய
மே பின்னாளில் ஒரு கீபோர்ட் சக்கரவர்த்தியையே உருவாக்கிற்று.




திலீப் குமார் தன் தந்தை மீது பேரன்பு கொண்டிருந்தார்.இருப்பினும் அவனின் வாழ்க்கையில் முதல் அடி விழுந்தது.திலீப்புக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது தந்தை சேகர் 43 வயதில் திடீர்மரணம் எய்தினார்.தாய் மற்றும் சகோதரிகள் செய்வதறியாது தவித்தனர். இருப்பினும் திலீப்புக்கு இசையில் புதிதாகசாதனை படைக்கவேண்டும் என்ற தீராநோய் பற்றிக்கொண்டது. தந்தை இட்ட அடித்தளத்தை மேலும் பலப்படுத்த அடுத்த கட்டத்தை நோக்கி மனம் தளராமல் புறப்பட்டான்.அவனுக்கு தாயார் கஸ்தூரி(கரிமா) மிக உந்துதலாக இருந்தார்.”தந்தையின் இழப்பு பெரும் சோகத்தை தரினும் காலப்போக்கில் தன் தாயார் அல்லுபகலும் பாடுபட்டு தந்தை இல்லை என்ற உணர்வே இல்லாமல் தங்களை வளர்த்ததாக ரஹ்மான் அடிக்கடி சிலாகித்துகொள்வார்.பின்னாளில் வரலாறு படத்தில் ”தீயில்விழுந்ததேனா” பாடலை தனது தாய்க்கு சமர்ப்பித்து உருகி பாடியிருப்பார்.


ரஹ்மான் இன்றும் தன் தந்தையை மானசிகமாக நேசித்து வருகிறார். தனது வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு வேளையும் தந்தையின் படத்தை தரிசித்துசெல்வார்.

அடுத்த பாகத்தில் சந்திப்போம்...
இவன் இரோஷன் 

18/12/2012

இலங்கை இசைக்கலைஞர்களின் ORIENTAL MUSIC ORCHESTRA -2012



SRILANKA'S NATIONAL ORIENTAL  MUSIC ORCHESTRA என்ற இந்நிகழ்ச்சி COLOMBO ROYAL NORWEGIN EMBASSY  ஏற்பாட்டில்  இந்தவருடம் மார்ச்  6 ஆம் திகதி  கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த தமிழ்,சிங்கள மொழிகளை சேர்ந்த சிறந்த  நூறு இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.



இந்நிகழ்வை நேரில் பார்க்கமுடியவில்லை எனினும்  இந்நிகழ்வில் வயலின் இசைத்த யாழ் பல்கலைக்கழக நண்பி மூலம் சில மாதங்களிற்கு முன்னர் பார்க்க நேரிட்டது. மிகவும் அற்புதமான இசை ஒருங்கமைப்புடன் பாரம்பரிய இசை கருவிகளின் சங்கமத்தில் இவ் ஓர்கெஸ்ட்ரா ஒழுங்கமைக் கப்பட்டிருந்தது.  இலங்கையில் அதிகமான இசை இசை நிகழ்ச்சியை கண்டுகளித்திருப்பினும் இவ் ஓர்கெஸ்ட்ராவில் இசைக்கப்பட்ட அனைத்து இசை கோர்வைகளும் என்னை கட்டிப்போட்டுவிட்டன.அதன் பின்னர் இதை பற்றி பகிரலாம் என்ற எண்ணம் தோன்றியது.அது பற்றிய ஒரு தேடலில் கிடைத்தவையே இந்த பதிவு




இந்நிகழ்ச்சி இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் இசையை பிரதிபலிப்பதான ஒரு கலவையாக இருந்தது.இந்நிகழ்ச்சிக்கான வழிநடத்தலை INSTITUTE OF HUMAN EXCELLENCE AND ARU SRI ART THEATRE மேற்கொண்டிருந்தது.இந்நிகழ்ச்சிக்கான பிரதான ஆலோசகராக திருமதி கலாசூரி அருந்ததி சிறீரங்கனாதன் செயற்பட்டார். ஈழத்தின் புகழ்பெற்ற கலாவித்தகர் இவர். இவர்களின் முற்றுமுழுதான சுயவிபரம் சாதனைகள் விருதுகள் பற்றி இத்தளத்தில் அறியலாம்....

திருமதி அருந்ததி சிறீரங்கநாதன்
http://184.154.234.7/~arunthat/profile.html

தென்னிந்திய நடிகர் வினித்தால் கௌரவிக்கப்பட்டபோது
இந்நிகழ்ச்சிக்கான பயிற்சி ஆறு மாத காலங்களாக நடைபெற்று இறுதியில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. இலங்கையின் முன்னணி இசை 
கலைஞர்களான திருமதி அருந்ததி சிறீ ரங்கனாதன்,டாக்டர் நிர்மலாகுமாரி ரொட்ரிகோ,குமாரலியனவத்தே,சோமசிறி இலசிங்க, எஸ்.மகேந்திரன்விஜேரத்ன ரணதுங்க,டாக்டர் பாலாம்பிகை ராஜேஸ்வரன் போன்றவர்கள் இந்நிகழ்ச்சிக்கான பயிற்சியை வழங்கினர்.


இவ் ஓர்கெஸ்ட்ரா  முக்கியமாக தென்னிந்திய கர்நாடக இசையை பிரதிபலிக்கும் முகமாகவும் இசைக்கருவிகள் நரம்புவாத்தியங்களே அதிகம் இசைக்கப்பட்டன. மேலும் தமிழரின் பாரம்பரிய தனித்துவ வாத்தியங்களான தவில்,நாதஸ்வரம்,மிருதங்கம் உட்பட சித்தார், சாரங்கி, சரோட், எஸ்ராஜ்தில்ரூபா போன்ற ஹிந்துஸ்தானி இசைகருவிகள்,உருமி,தப்பு,பறை,மோர்சிங்,கஞ்சிரா,கடம்,சுத்தமத்தளம், 
கோட்டுவாத்தியம்,முரசு,கொம்பு,புல்லாங்குழல்,மோகன்வீணா,வயலீன்  
ஹார்மோனியம்தபேலா,சாந்தூர், போன்ற பல்வேறுபட்ட இசைகலாச்சாரங்களின் கோர்வையில் இந்நிகழ்ச்சி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இவ் ஓர்கெஸ்ட்ராவில் முதலாவதாக ஹம்சத்வனி ராகம்,ஆதி தாளத்தில் முத்துஸ்வாமி தீட்சிதர் அமைத்த வதாபி கீர்த்தனம் இசைக்கப்பட்டதுஇதற்கான நெறியாள்கையை கலாசூரி அருந்ததி சிறீரங்கனாதன் மேற்கொண்டிருந்தார்.இக்காணொளிகளை இங்கு பார்க்கலாம்.



இதற்கடுத்தபடியாக பாஷந் பைரவி ராகம்,த்ரீ தாளத்தில் ஹிந்துஸ்தானி இசை சங்கீத் விசாரட் சோமசிறீ இளசிங்க அவர்களின் நெறியாள்கையின் கீழ் இசைக்கப்பட்டது.



அடுத்தபடியாக  நியான் ஹி மால்கர் மற்றும் ராக பஹார் ராகத்தை தழுவி டாக்டர் நிர்மலா குமாரி அவர்களின் இசைநெறிபடுத்தலில் மேலும் ஒரு  ஹிந்துஸ்தானி  இசைகோர்வை வாசிக்கப்பட்டது.



அதன் பின்னர் குமார லியனவத்த அவர்களின் நெறியாள்கையில் சிங்கள கிராமிய இசை கருவிகளான கட்டா பெரா,பஹாதரட்ட பெரா,சப்ரகமூவ பெரா போன்றவற்றுடன் கர்நாடக இசைகருவிகளின் கலவையில் சிங்கள கிராமிய இசை வாசிக்கப்பட்டது.மிகவும் வித்யாசமான ஒரு அனுபவமாக இது இருந்தது.



 மேலும் இறுதியாக  இந்திய ராகங்களின் கோர்வையான  கர்நாடக ராகமாலிகை ஒன்றை கர்நாடக்கிராமிய இசையுடன் கலாசூரி அருந்ததி சிறீரங்கநாதன் அவர்கள்   நெறியாள்கை செய்திருந்தார்.



நிகழ்ச்சியின் இறுதியில் பங்களாதேஷ்,பலஸ்தீன்,நோர்வே இசை கலைஞர்களின் இசைநிகழ்வும் நடைபெற்றது.இறுதியாக இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திமுடிக்க காரணமாகவிருந்த அனைத்து கலைஞர்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட பல்வேறு சமுகத்தை ஒன்றிணைக்கும் இசைநிகழ்சிகள் மிகவும் வரவேற்கத்தகது.இந்நிகழ்ச்சியை சிறப்புறநடாத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 இந்நிகழ்ச்சி பற்றிய தகவல் தந்து உதவிய நண்பிக்கு என் நன்றிகள்.


-இவன் இரோஷன்-