12/09/2013

ஈழத்து இசை-நண்பன் ”ஜீசஸ்”இன் இசைப்பயணம்.

சில வருங்கால பிரபலங்கள் எமக்கு பக்கத்திலே எங்களோடு ஒருவனாய் கூடவே இருக்கலாம்.ஒன்றாக எங்களோடு ஊர் சுற்றித்திரியலாம். ஒன்றாக டீ கடையில் உட்கார்ந்து வாழ்க்கையை பற்றிப்பேசிக்கொண்டே டீ குடிக்கலாம். அந்த நபர் எங்கள் நண்பர்களாக இருக்கலாம்,உறவினர்களாக இருக்கலாம்.பக்கத்துவீட்டு பையனாக கூட இருக்கலாம். ஆனால் இந்த உண்மை புலப்பட பலருக்கு சில காலங்கள் எடுக்கலாம். சிலருக்கு ஒரு உள்ளுணர்வு சொல்லும் இவன் நாளைக்கு ஒரு கலக்கு கலக்குவான் என்று.

என் நண்பன் ஜீசஸை பார்க்கும் போது எனக்கு அப்படியான ஒரு உள்ளுணர்வு ஒன்று தட்டிச்செல்லும். அவன் என் நண்பன் என்று என் சட்டை காலரை தூக்கிச் சொல்லும் காலம் தொலைவில் இல்லை. இது ஒரு வகை சுயபுகழ்ச்சி போல இருக்கலாம். அவன் அவ்வளவு பெரிய அப்பாட்டாக்கரா என்று கேட்கலாம். எனக்கு மட்டும் தான் தெரியும் என் நண்பனின் பயணத்தின் வடுக்களும் வலிகளும். இந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இசை தான் வாழ்க்கை என்று சொல்லும் ஒரு இளைஞனை காண்பதே கடினம்.அப்படி எண்ணங்கள் இருந்தாலும் சொல்வதற்கு தயங்கலாம். எப்போதும் சமுகத்தின் வரையறைகளுக்கு கட்டுப்பட்டு இஞ்சினியர்,டாக்டர் கனவுகளுடன் வாழும் இளைஞர்கள் மத்தியில் இசையை தெரிவுசெய்த என் நண்பன் எனக்கு யதார்த்தமானவன். பலருக்கு விசித்திரமானவன்.  
எந்தவித இசைப்பின்னணியும் இல்லாமல் நான்கு நாட்கள் மட்டுமே ஒரு வாத்தியாரிடம் கீபோர்ட் கற்றுவிட்டு இன்று மெட்டமைத்து இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளனாய் என் நண்பன் மெருகேறியுள்ளான். ஆரம்பத்திலே விளையாட்டாக பக்கத்து சர்ச்சில் பயன்படுத்திய ஒரு மைக்கை  சிறு தடியில் கட்டி அதை ஒரு ஒரு பிளாஸ்டிக் கதிரையில் பொருத்தி வீட்டு ஹாலில் இருக்கும் ஒரு சிறு அறையில் வெள்ளைச்சீலை நான்குபுறமும் கட்டி ஒரு சிறிய ரெக்கார்டிங் தியேட்டர்(????) அமைத்திருந்தோம். அதை பயன்படுத்தி மிக குறைந்த தொழிநுட்பத்துடன் இரண்டு வருடங்களிற்கு முன்னர் சில பாடல்களை நண்பனின் இசையில் வெளியிட்டு இருந்தோம்.(அவை இப்போது நண்பனால் மீண்டும் மெருகேற்றப்பட்டுவருகின்றன) இப்படி ஆரம்பித்து படிப்படியாக பிழைகளை திருத்தி தரமான தொழிநுட்பத்துடன் “அடர்காட்டில் தானே” என்ற பாடல் நண்பனின் இசையில் வெளிவந்தது.இந்த பாடலின் இசைக்கு இன்னும் மெருகேற்றி அழகான வீடியோ பாடலாக ஹிமாலயா க்ரியேஷன்ஸ் வெளியிட்டனர். இந்த பாடல் யாழ்மண்ணிலிருந்து வெளிவந்த மிக தரமான பாடல்களில் ஒன்றாக அனைவராலும் பாராட்டப்பட்டது.இந்த பாடலுக்கு இலங்கையின் பிரபலான இசைக்கலைஞர்கள் தங்கள் பாராட்டுக்களை சமுக வலைத்தளங்களில் இட்டிருந்தனர்.

பாடல்- அடர்காட்டில் தானே
இசை-ஜீசஸ்
பாடல் வரிகள்- துவாரகன்
பாடி நடித்தவர்- நிஷாகரன்
ஒளிப்பதிவு&படத்தொகுப்பு-துஷிகரன்

பாடலை கேட்டு,பார்த்து ரசிக்க,

அடர் காட்டில் தானே -http://www.youtube.com/watch?v=I7WqGpE0cl0

நம் நாட்டு தமிழ் இசையை பொறுத்தவரை பலர் இசையமைக்கிறார்கள், பாடல் எழுதுகிறார்கள், பாடுகிறார்கள் ஆனால் ஒரு சிலரே அதை தொடர்ச்சியாக செய்கிறார்கள். பலரின் பயணம் இடையிலே தடைப்பட்டு விடும். என்ன தான் திறமையிருந்தாலும் சொந்த செலவில் ஒரு சில பாடல்கள் வெளியிடலாம்.தொடர்ந்து பாடல்கள் வெளியிடுவதற்கு ”பணத்திற்கு எங்கு போவது”? என்றொரு வினா எழ ஆரம்பித்ததும் எல்லாம் ஸ்தம்பிதமாகிவிடும். எனவே இப்பயணத்தில் பலர் இடைநடுவே தலைமறைவாகிவிடுகின்றனர். என்ன தான் கனவுகள் என்று சொல்லி பயணத்தை ஆரம்பித்தாலும் பணம் என்ற ஒரு பதார்த்தம் எல்லாவற்றையும் மூழ்கடித்துவிடும். கனவுகள் என்பது காசு உள்ளவனுக்கு மட்டுமே சாத்தியமானதொன்றாக உள்ளது.

ஆனால் என் நண்பன் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையுடன் தன் பயணத்தை தொடர்கிறான். தற்போது நண்பன் ஒரு இசை ஆல்பம் ஒன்றின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். மொத்தம் பத்து பாடல்கள் உள்ளடங்கலாக விரைவில் வெளிவர இருக்கிறது. அவன் பயணம் தொடரவேண்டும். அதற்கு நல்ல ரசிகர்கள்,நண்பர்கள்,ஊடகங்கள் ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.அந்த ஆல்பம் சிறப்பாக வெளிவந்து வெற்றிபெற நண்பர்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நண்பனுடன் தொடர்புகொள்ள,

MOBILE- +94779251911 or 0779251911