29/12/2012

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை-பாகம் 1

 (இலங்கை தமிழ் பிரதேசம் முழுதும் பிரதி ஞாயிறுகளில் வெளிவரும் தமிழ்த்தந்தி பத்திரிகைக்காக எழுதிவரும் "யார் ரஹ்மான்?" என்ற தொடரின் மாற்றம் பெற்ற வடிவமே இத்தொடர். இதன் மூன்று  பாகங்கள் இதுவரை தமிழ் தந்தி பத்திரிகையில் வெளிவந்துள்ளன.இச்சிந்தனையை தூண்டி வாய்ப்பளித்த  சுகந்தன் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.)


Add caption

சரித்திரங்கள் தானாக பிறப்பதில்லை அவை உருவாக்கப்படுகின்றன. ஒரே பாதையில் செல்லும் உலகை மாற்றி புதுமை படைப்பவனே சரித்திர நாயகனாக வரலாற்றில் இடம்பெறுகிறான்.அந்த வகையில் சிறந்த இசை மற்றும் பாடலுக்கான உலகின் தலைசிறந்த விருதான இரண்டு ஆஸ்கார்கள்,இரண்டு கிராம்மி விருதுகள்,தலா ஒவ்வொரு கோல்டன் க்லோப்,பஃப்டா விருதுகள் போன்ற உலக விருதுகளோடு இந்திய அரசின் நான்கு தேசியவிருதுகள்,தென்னிந்திய வட இந்திய சிறந்த இசைக்கான 28 பில்ம்ஃபேர் விருதுகள் உட்பட இசைக்கான 103 விருதுகள்,டைம் சஞ்சிகையின் அங்கீகாரம்,நோபல் மேடையில் இசைநிகழ்ச்சி,மியாமி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் இன்னும் எண்ணிலடங்கா சாதனைகள்  ஒரு இசைத்தமிழன் இவர். தாஜ்மகால் எப்படி இந்தியாவின் உலக அதிசயமோ அதே போல இவர் இந்தியாவின் இசை அதிசயம். இசைப்புயல்,ஆஸ்கார் நாயகன் என உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தியாவின் அடையாளம் ஏ,ஆர்.ரஹ்மானின் ஆரம்ப வாழ்க்கை பயணம் பற்றிய தேடலின் விழைச்சலே இந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை.





சரித்திரத்தில் இடம்பிடித்த ஒவ்வொரு மனிதனும் வெளியுலகிற்கு  முதன்முதலில் தெரியவரும் போது அக்கணத்தில் கேட்கப்பட்ட கேள்வி ”யார் இவன்”?.இதே போல இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்தின் பாடல்கள் வெளிவந்து தேசியவிருது பெற்று இந்திய திரை இசையையே புரட்டிப்போட்ட போது இந்தியா திரையுலகே பிரமிப்போடு கேட்ட கேள்வி யார் இந்த ரஹ்மான்? 2009 ஆம் ஆண்டு ஆஸ்கார் மேடையில் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று ஒரு மனிதன் சொல்லி இரண்டு விருதுகளை வாங்கிய போது இந்த உலகமே கேட்ட கேள்வி யார் இந்த ரஹ்மான்?இந்த இசைப்பிரவாகத்தின் ஆரம்பகாலம் எப்படியிருந்தது? என்னென்ன சவால்களை எதிர்கொண்டார்? எதையெதை இழந்தார்? இவ்வுச்சத்தை தொட என்னென்ன உந்துதலாக இருந்தது இசைப்புயலின் வாழ்க்கை கடிகாரத்தை கொஞ்சம் முன்னோகி திருப்பி பார்ப்போம்.




சேகர்,கஸ்தூரி(இப்போது கரிமா) தம்பதியினருக்கு 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி  பிறந்தார்.ரஹ்மானுக்கு மூன்று சகோதரிகள். பிரபல பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷின் தாயர் ரெஹ்ஹானா ரஹ்மானின் சொந்த தமக்கையாராவார்.ரஹ்மான் என்று பிற்காலத்தில் அறியப்பட்ட இச்சிறுவனின் இயற்பெயர் திலீப்குமார்.திலீப்பின்(ரஹ்மான்) தந்தை ஆர்.கே சேகர் ஒரு பிரபல மலையாள இசையமைப்பாளர்.





இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.1964ஆம் ஆண்டு பழசிராஜா என்னும் மலையாள படம் மூலம் திரையிசைக்கு அறிமுகமானார் சேகர்(பின்னர் இப்படம் அண்மையில் மெருகேற்றப்பட்டு மம்முட்டியின் நடிப்பில் வெளிவந்து இசைஞானி இளையராஜாக்கு தேசியவிருது பெற்றுகொடுத்து).இப்படத்தில் மொத்தமாக 12 பாடல்கள் இடம்பெற்று இருந்தன. அக்காலத்தில் ஜேசுதாஸ் பாடிய ”சொட்ட முதல் சுடல வாறே” என்ற பாடல் மிக பிரபலம்.

இந்த பாடலை கேட்டுபாருங்கள் மொழி புரியாவிடினும்  எவ்வளவு உணர்வுபூர்வமானதயிருக்கும்.



 




ரஹ்மானின் தந்தையாரே சிறந்த குருவாக இருந்து இசை கற்றுக்கொடுத்தார். சேகர் ஹார்மோனியம் வாசிப்பதில் வல்லவர். எனவே மகனுக்கு இசைநுணுக்கங்களை திறம்பட கற்றுக்கொடுத்தார்.திலீப் சிறுவனாக இருக்கும் போதே ஹார்மோனியக் கட்டைகளை துணியால் மூடிவிட்டு வாசித்து கலக்கினான். இந்த ஹார்மோனிய
மே பின்னாளில் ஒரு கீபோர்ட் சக்கரவர்த்தியையே உருவாக்கிற்று.




திலீப் குமார் தன் தந்தை மீது பேரன்பு கொண்டிருந்தார்.இருப்பினும் அவனின் வாழ்க்கையில் முதல் அடி விழுந்தது.திலீப்புக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது தந்தை சேகர் 43 வயதில் திடீர்மரணம் எய்தினார்.தாய் மற்றும் சகோதரிகள் செய்வதறியாது தவித்தனர். இருப்பினும் திலீப்புக்கு இசையில் புதிதாகசாதனை படைக்கவேண்டும் என்ற தீராநோய் பற்றிக்கொண்டது. தந்தை இட்ட அடித்தளத்தை மேலும் பலப்படுத்த அடுத்த கட்டத்தை நோக்கி மனம் தளராமல் புறப்பட்டான்.அவனுக்கு தாயார் கஸ்தூரி(கரிமா) மிக உந்துதலாக இருந்தார்.”தந்தையின் இழப்பு பெரும் சோகத்தை தரினும் காலப்போக்கில் தன் தாயார் அல்லுபகலும் பாடுபட்டு தந்தை இல்லை என்ற உணர்வே இல்லாமல் தங்களை வளர்த்ததாக ரஹ்மான் அடிக்கடி சிலாகித்துகொள்வார்.பின்னாளில் வரலாறு படத்தில் ”தீயில்விழுந்ததேனா” பாடலை தனது தாய்க்கு சமர்ப்பித்து உருகி பாடியிருப்பார்.


ரஹ்மான் இன்றும் தன் தந்தையை மானசிகமாக நேசித்து வருகிறார். தனது வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு வேளையும் தந்தையின் படத்தை தரிசித்துசெல்வார்.

அடுத்த பாகத்தில் சந்திப்போம்...
இவன் இரோஷன்