09/10/2012

மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்




இவ்வுலகில்எத்தனையோ மனிதர்கள் தோன்றி மறைகின்றனர். இருப்பினும் மறைந்தபின்னும் இவ்வுலகில் மக்கள் மனதில் வாழ்பவர்கள்ஒரு சிலரே.அவர்கள் இவ்வுலகிற்கு விட்டுச்சென்ற எச்சங்கள் என்றும் அவர்களைநினைவுபடுத்திக்கொண்டு இருக்கும்.இந்த வகையில் ஈழத்திலே பிறந்து ஈழத்திலே வாழ்ந்து சாதனைபல செய்து விருதுகள் பல வாங்கி எம் மண்ணின் பெருமையை உலகறியச்செய்த நான் நேரில் கண்ட என் அன்னையின் ஊரில் பிறந்த ஒரு  மகான் ஒருவரைபற்றி எனது முதல் பதிவில் பகிர்வதில் பெருமையடைக்கின்றேன்.வீரமணி ஐயர் அவர்கள்.
நேற்றுமுன்தினம் (08.10.2012) அவர்களின் ஒன்பதாவது நினைவு தினமாகும்.மகாவித்வான் நினைவாக இந்த பதிவை பகிர்கின்றேன்.

வாழ்க்கை வரலாறு

இவரைபற்றி  நீண்ட அறிமுகம் தேவையில்லை.பலர் அறிந்து இருப்பார்கள்.சிலர்இவரை அறியாமலிருப்பினும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது இவரின் பாடல்களை கேட்டு இருப்பார்கள்.பாடியிருப்பார்கள். எனினும் நான் மகான் பற்றி படித்தஅவர் இல்லத்தில் கேட்டறிந்த சில தகவல்களை பகிர்கிறேன்.ஈழத்திருநாட்டில் தமிழ்  கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும்  இணுவிலில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் திகதி பிரபல வயலின் வித்துவான் நடராஜ ஐயர் அவர்களுக்கு இரண்டாவது புதல்வனாக பிறந்தார்.இவரின் இயற்பெயர் சப்தரிசிசர்மா.இளமையிலே கலையில் ஆர்வம் கொண்ட ஒரு குறும்பான,துடிதுடிப்பான மனிதராக காணப்பட்டார்.


தனது இளமைக்கல்வியை இணுவில் இந்துக்கல்லூரியிலும் உயர்கல்வியை மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் பயின்றார்.பாடசாலைகாலங்களிலே பல கலைநிகழ்ச்சிகள் செய்து வந்தார்.மனோகரா என்னும் நாட்டிய நாடகத்தில் பெண்வேடமிட்டு நடனமாடி அனைவருக்கும் கலாவிருந்து அழித்தார். பாடசாலைக்கலத்தில் சிறந்தமாணவன் விருதை பெற்றார்.
பெண்வேடத்தில்

தொடர்ந்து தனது மேற்படிப்பிற்காக இந்தியா சென்றார்.அங்கு தென்னிந்திய கலாச்சேத்திர நடனப்பள்ளியில் பரதம் கற்றார்.இசையை எம்.டீ.ராமனாத ஐயரிடமும் பிரபல இசைமேதை,இசையமைப்பாளர் பாபநாசம் சிவன் அவர்களிடமும் கற்றார்.ருக்மணிதேவி அருண்டேல் அவர்களிடம் நடனம் கற்றார்.இந்தியாவில் கற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தான் இவரது கலைவாழ்வில் பெரும் திருப்புமுனையான சம்பவம் நடந்தது.திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயம் மீது “மயிலைக்குறவஞ்சி” பாடினார்.


கபாலீஸ்வரரை தலைவராகவும் கற்பகாம்பாளை தலைவியாகவும் வைத்து பாடிய நூலின் முதல் பாடல்`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்..” என்ற பாடல் இவருக்கு பெரும் உலக புகழை ஈட்டித்தந்தது.ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த இந்த இராகமாலிகை கீர்த்தனையை பிரபல தென்னிந்திய பாடகர் செளந்தரராஜன் அவர்கள் பாடினார்.இப்பாடல் வெளியீட்டில் தென்னிந்தியாவின் பிரபல இசைமேதைகள் மகானை பாராட்டி வாழ்த்தினர். பாபநாசம் சிவன் அவர்கள் இவ்வாறு பாராட்டை தெரிவித்தார் “மயிலை குறவஞ்சி” எனும் சிறிய நூலை இழைத்த அற்புத சிலந்தி நமது வீரமணி”. ஆலய நிர்வாகத்தினர் இப்பாடலை ஆலய கருங்கல்லில் “இப்பாடலை எழுதியவர் யாழ் மண்ணை சேர்ந்த வீரமணி ஐயர்” என இட்டனர். அன்று யாழ்மண்ணின் புகழ் தென்னிந்தியா முழுதும் இப்பாடல் மூலம் ஒலித்தது. இன்று இவ்வாலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கானோர் இப்பாடலை பார்வையிட்டும் பாடியும் வருகின்றனர்.




தம்பதியினர்

இவ்வாறு தனது கலை வாழ்விற்கு தகுந்த அடித்தளத்தை இட்டுக்கொண்டு மீண்டும் நாடு திரும்பினார்.இங்கு வந்து ஆசிரிய பணியை செய்யலானார். ருக்மணி அம்மையார் தன் வாழ்க்கை துணையாக கொண்டு தன் மண வாழ்கையை தொடர்ந்தார்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆசிரியப்பணியை தொடர்ந்தார்.அதன் பின் கோப்பாய் ஆசிரியர் கலா
சாலையில் ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் இயற்றினார். இப்பாடல்களை தென்னிந்திய கலைஞர்களை வைத்து பாடவைத்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்ததோடு மட்டுமில்ல்லாது யாழ்மண்ணிற்கு அவர்களை அழைத்துவந்துகச்சேரி செய்யவைத்து எம் மண்ணிற்கு பெருமை தேடித்தந்தார்.

வாழ்வில் நடந்த சுவாரஷ்யமான சம்பவங்களும்,மகானின் இயல்புகளும்


வீரமணி ஐயர் அவர்கள் மீது உள்ள அதீத பக்தியால் அவரை பற்றி விபரம் திரட்டநேற்று முன்தினம் மகாவித்வான் இல்லத்திற்கு செல்ல பாக்கியம் கிடைத்தது.அங்கு இவரையே தெய்வமாக நினைத்து வாழ்ந்து வரும் அம்மையார் பகிர்ந்த சில சம்பங்களையும் அவர் குண இயல்புகளையும் அம்மையாரின் அனுமதியோடு பகிர்கின்றேன்.

“கற்பகவள்ளி நின் பொற்பதங்கள்” என்னு பாடல் பாட ஒரு கதை உண்டு.
இவர் இந்தியாவிலே கற்றுக்கொண்டு இருந்தபோது தன் மேற்படிப்பிற்காக பணம் தேவைப்பட்டது.வழமையாக பணம் அனுப்பும் அண்ணனும் அனுப்பவில்லை.அடுத்தநாள் 12 மணிக்குள் பணம் செலுத்தி ஆக வேண்டும்.
மிகவும் மனமுடைந்தவர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் மனமுருகி இயற்றிய பாடலே“கற்பகவள்ளி நின் பொற்பதங்கள்” ஆகும்.இந்த பாடலை கேட்ட பின் மகானின் திறமையை மெய்ச்சிகலாச்சேத்திரா ஆசிரியர்கள் இவருக்கு மேற்படிப்புகளை இலவசமாகவே கற்பித்தனாராம்.

பலாலி ஆசிரியர்கலாச்சாலையில் கற்பித்த காலத்தில் பக்கத்தில் தோட்டம் காணப்பட்டது.அங்கு வெங்காயச்செய்கையில் சில பெண்மணிகள் ஈடுபட்டு வந்தனர்.அவர்கள் வெங்காயம் விதைத்து அதை பிடுங்கி கூடையில் போட்டு தலையில் சுமந்து நடைபயிலும் காட்சி இவரை நன்றாக கவர ஒரு முறை அவர்களை பார்த்தவண்ணமே மனதுக்குள் பாடல்வரி எழுதிமெட்டுப் போட்டபடி நடந்து சென்று மின்கம்பத்தில் மேதி நெற்றியில் சிறு காயத்தோடு வீடு திரும்பினாராம். அதன் பின் அப்பாடலை மாணவர்களுக்கு கற்பித்து மேடையேற்றி வெற்றியும் கண்டார்.இச்சம்பவம் இவர் கலைமேல் எவ்வளவு மயக்கம் கொண்டிருதார் எனபதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

ஒரு முறை ஒரு தலைப்பில் நான்கு கதைகள் எழுதவேண்டி சந்தர்ப்பம் ஏற்பட்டது.ஒரே தலைப்பில் நான்கு கதைகள் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல.ஒருவாறு மூன்று கதைகள் எழுதிவிட்டார்.நான்காவது கதை நீண்டநேரம் ஜோசித்தும் வரவில்லைஉடனே வேட்டியை மடித்து “சண்டி கட்டு” கட்டிய படி ஜோசித்தவாறே பரராஜசேகரப்பிள்ளையார் ஆலய வீதியால் நடந்து சென்றார். வீதியில் சென்ற இளைஞன் “என்ன் ஐயா ஜோசனை” என்று கேட்ட “ஒண்டு இல்லையடா மோனே” என்று சொல்லி விட்டு உடனே வீடு திரும்பி நான்காவது கதையையும் எழுதி முடித்தாராம். அதன் பின் நான்கு கதைகளுக்கும் பரிசு கிடத்ததாம்.

மேலும் இவர் பேச்சிலே குறும்புதனமும்,குழந்தை தனமும் மிக்கவராக காணப்பட்டார்.அயல்வீட்டு சிறு பிள்ளைகளுக்கு இலவசமாக சங்கீத,நடன வகுப்புகள் கற்றுக்கொடுப்பார்.கிருஷ்ணரே இவருக்கு பிடித்த தெய்வமாகும். நெற்றியில் நாமத்துடன் கோவில் வீதியில் அடிக்கடி தென்படுவார். வைகுண்ட ஏகதசி வேளையில் இசைகச்சேரி செய்வார் ஆலயத்தில்.மேலும் தன்னிடம் கற்கவரும் மாணவர்களை தன் பிள்ளை போல நினைத்து கல்வி ஊட்டுவார். சிறுவர்,சிறுமியர் மீது அன்பாக பேசி பழகுவார்.

எம் அம்மா சிறுமியாக இருந்த காலத்தில்ஆலயத்த்தி கிருஷ்ணருக்கு பூசை செய்தபின் நெற்றியில் அனைவருக்கும் நாமம் தருவித்து “அடி பிள்ளை நல்லா இருடி நல்லா இருடி” என்று ஆசி கூறுவாராம். என் அன்னை அடிக்கடி இன்றும் உச்சரிக்கும் பெயர் வீரமணி ஐயர்.இவ்வளவு காலம் சென்றும் என் அன்னை வீரமணி ஐயர் மேல் இவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பேரைஅன்பால் சம்பாதித்து இருக்கினறார் என்பது கண்கூடு.


இயற்றிய பாடல்கள்

நல்லூர் முருகன் பாடல்கள்,இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாடல்கள்,மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் மீதான பாடல்கள்,கோண்டாவில் சிவகாமியம்மன் பாடல்கள் - பாடியவர்: சீர்காழி எஸ். சிவசிதம்பரம்,காரைநகர் திக்கரை முருகன் பாடல்கள்,சுட்டிபுரம் கண்ணகை அம்மன் பாடல்கள் - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்.இவரின் அனேக பாடல்களை தென்னிந்திய இசைகலைஞர்கள் பாடினர்.பாடல்களுக்கு மெட்டும் இவரே அமைத்தமை குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய விடயமாகும்.

இயற்றிய சாகித்யங்கள்

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் (ராகமாலிகை)- பாடியவர்: டி. எம். செளந்தரராஜன்
சின்ன வயதினிலே (சாகித்யம்) - பாடியவர்: சுதா ரகுநாதன்
 சரஸ்வதி வீணை (ராகமாலிகை) - பாடியவர்: நித்யஸ்ரீ மகாதேவன்
தசாவதாரம் ( ராகமாலிகை),என் முகம் பாராயோ சண்முகனே (விருத்தம்)- பாடியவர்: மகாராஜபுரம் சந்தானம்
ஏனடா முருகா,என்னடி பேச்சு சகியே, கஜமுகாகுஞ்சரன், சோதராகுழல் ஊதி விளையாடி,மட்டுநகர் ,நவரச நாயகி,சாரங்கன் ,மருகனேவண்ண ,வண்ணகற்பக விநாயகனே,தாமரை இதழிலே, நாதம் கேட்குதடி ,நயினையம்பதி.

இயற்றிய உருப்படிகள்

72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும்.. காரணம் இப்படி 72 மேளகர்த்தா இராகங்களுக்கும் பாடல்கள் இயற்றியவர்கள் கோடீஸ்வர ஐயர், ராமசுவாமி தீக்‌ஷிதர், மகாவைத்தியநாதர்,போன்ற சிலரே.அவர்களில் ஒருவரகா நம் மண்ணை சேர்ந்த மகாவித்துவானும் இடம்பெற்றாது எம் மண்ணிற்கு பெருமை.
இளவயதில்

கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணிஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார். இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் கந்தசுவாமி கோயில் மீது பாடிய பாடல்களின் (கீர்த்தனைகள்) தொகுப்புக்கள் மலேசியா வாசுதேவன், நித்தியஸ்ரீ ஆகியோரால் பாடப்பெற்று ஒலிப் பேழைகள், இறுவெட்டுக்களில் வெளிவந்துள்ளன.

இவரின் படைப்புகளை இன்றும் அவர் இல்லத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


பாராட்டுகளும்,விருதுகளும் பட்டங்களும்

 கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இவருக்கு நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் ”சாகித்ய சாகரம்”என்ற சிறப்புப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.1982 ஆம் ஆண்டு வட இலங்கை சங்கீத சபை பொன்விழாவில் ”கவிமாமணி”என்ற சிறப்பு பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.இயல் இசையில் இவருக்கு இருந்த மேன்மையால் இயலிசை வாரிதி, மஹா வித்துவான் என்ற சிறப்பு விருதுகள் வழங்கப்படன.
1999 அக்டோபர் 6 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கௌரவ முதுமாணி (எம்.ஏ.) பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை,கர்நாடக சங்கீத மேதை டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா,செளந்தர்ராஜன்,சீர்காழி,நித்யசிறீ,குன்னக்குடி போன்ற சரித்திரங்களின் பெருமதிப்புக்கும் பாராட்டுக்குமுரிய கலைஞனாக மகான் காணப்பட்டார்.

குன்னக்குடி அவர்களினது,தியாகராஜ ஆராதனைவிழா பாராட்டுசான்றிதழ்கள்

மகாவித்துவானின் இறுதி நாட்கள்

கர்நாடக இசை, நடனம் ஆகிய இரண்டிலும் டிப்ளோமா (Diploma in Dance & Music) தகைமைகளைக் கொண்டிருந்த வீரமணிஐயர் அவர்கள் தனது அரச பணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.1996 ஆம் ஆண்டு அவரது மனைவியார் ருக்மணி அம்மையார் காலமானார்.அதன் பின் தன் கலைவாழ்க்கையை சுசீலாதேவி அம்மையாருடன் தொடர்ந்தார்.தன் இறுதி மூச்சு வரை கலைக்காகவே வாழ்ந்தார்.2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி இம்மண்ணை விட்டு இந்த கலைப்பேழை மறைந்தது.இவரின் இறுதி சடங்கில் பல்லாயிரக்கணக்கான மகான்களும் வித்துவான்களும்,இவர் உருவாக்கிய மாணவர்களும்,அயலவர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர். இவரின் நினைவாக ஆசிரியர்கலாசாலையில் ஒரு திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.


உலகமே போற்றும் தென்னிந்திய இசைகலைஞர்களையே மெய்சிலிர்க்க வைத்த ஒரு சரித்திரத்தை நேரில் என் இரு கண்களால் கண்டு இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள பெருமையடைகின்றேன் பூரிப்படைகின்றேன்.
இருப்பினும் ஒரு சிறிய மனவேதனை ஒன்று எப்போதும் பற்றியவண்ணம் உள்ளது. எத்தனையோ சாதனைகள் செய்து சரித்திரம் படைத்து விருதுகள் வாங்கி எம் மண்ணை பெருமைப்படவைத்த கலைஞனை நினைவுகூரும் விதமாக ஒரு மிகப்பெரிய கலைவிழா எடுக்கப்படுவதில்லை.ஆரம்பத்தில் ஒருமுறை நினைவுகூரல் இடம்பெற்று இருப்பினும் அதன் பின் இடம்பெறாதது மன்வேதனைக்குரியது. இந்தியாவில் தியாகராஜ ஆராதனை எவ்வளவு சிறப்பாக நடக்கின்றதோ அதே போல நம் மண்ணில் வீரமணி ஐயரையும் நாம் நினைவுகூரவோண்டும்.அவரின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என அனைவரிடமும் தாழ்மையால கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி : திருமதி சுசீலாதேவி வீரமணி ஐயர்.

இது என் முதல் பதிவு தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்!!!
நன்றி..
  • இவன் - இரோஷன்!!!!