“நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்” என்று வைரமுத்து வார்தைகளால் முடிக்கப்பட்டு இசைப்புயலின் இசைக்கோர்வை கோர்க்கப்பட்டு நேற்றைய தினம் கடல் திரைப்படத்தின் SINGLE SONG வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பேஸ்புக்,ட்வீட்டர்,மற்றும் இதர தளங்களில் எங்கு பார்த்தாலும் இந்த பாடல் தான் அதிகம் பகிரப்பட்டது.நீண்ட நாட்களின் பின் இசைப்புயலின் இசையில் அழகு தமிழில் மெலோடி பாடல் வந்துள்ளது என்றும் இப்பாடல் தம்மை ரஹ்மானின் ஆரம்ப காலத்துக்கு அழைத்து சென்றுவிட்டது எனவும் நண்பர்கள்,இசை ஆர்வலர்கள் கூறுகின்றனர். கொண்டாடுகின்றனர்.
பல்லவி
நெஞ்சுக்குள்ளஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமாக் குனியலையே! குனியலையே!
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
சரணம்-1
பச்சி ஒறங்கிருச்சுபால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு
காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே!
நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?
சரணம்-2
ஒரு வாய் எறங்கலையேஉள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!
ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!
நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ.
-வைரமுத்து
இங்கே அடையாளமிடப்பட்ட வரிகள் என்னை மிகவும் கட்டிப்போட்டவை. வைரமுத்து பேனாக்குள் வார்த்தையை ஊற்றி வருடியிருக்கிறார்.
இப்பாடலின் காணொளிக்கு....
கடல் திரைப்படத்தின் முற்றுமுழுதான பாடல்கள் எப்படி இருக்கும்???
இறுதியாக இசைபுயலின் இசையில் விண்ணைத்தாண்டி வருவாயா, எந்திரன்,ராவணன் போன்ற பாடல்கள் வெளிவந்து ஹிட் ஆகியிருப்பினும் இசை ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடல் படத்துக்கான இசை.காரணம் மணிரத்னம் ரஹ்மான் காதல் கூட்டணி. ராவணன் திரைப்படம் படுதோல்வியடைந்ததால் மணி ரத்னம் கடல் படத்தை மிக சிரத்தையோடு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.கடல் திரைப்படம் அனேகமாக காதல் கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் படத்தின் முற்றுமுழுதான பாடல்களும் விரைவில் வெளிவரவுள்ளன.
இப்பாடல்கள் அனைத்தையும் வைரமுத்துவும்,மதன் கார்க்கியும் எழுதியுள்ளனர்.இரண்டு பாடல்கள் வைரமுத்துவின் அண்மையில் வெளிவந்த “தண்ணீர் தேசம்” தொகுப்பிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரஹ்மானின் இசையில் அழகான மெலோடி ஆல்பம் ஒன்றுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.என்னை பொறுத்தவரை இறுதியாக ரஹ்மானின் இசையில் வந்த முற்றுமுழுதான மெலோடி ஆல்பம் ”கண்களால் கைது செய்” என்றே கூறுவேன். அதன் பின் நிறைய படங்கள் தமிழில் வந்து இருப்பினும் ஒரு சில மெலோடி பாடல்களே படத்தில் இடம்பெற்று இருந்தன.காரணம் மெலோடி பாடல்களுக்கு சரியான படங்கள் அமையவில்லை. கமர்சியல் படங்களுக்கும்,நகரத்தோடு ஒன்றிய படங்களுக்கும் இசையமைத்து இருந்ததே காரணம். “நெஞ்சுக்குள்ள” பாடல் தந்த ஸ்பரிசத்தை அனைத்து பாடல்களும் தருமென எதிர்பார்த்திருக்கிறேன்.
இப்படிக்கு இசைபுயலின் இசை அலைக்காகய் காத்திருக்கும் இவன் இரோஷன்.