29/12/2012

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை-பாகம் 1

 (இலங்கை தமிழ் பிரதேசம் முழுதும் பிரதி ஞாயிறுகளில் வெளிவரும் தமிழ்த்தந்தி பத்திரிகைக்காக எழுதிவரும் "யார் ரஹ்மான்?" என்ற தொடரின் மாற்றம் பெற்ற வடிவமே இத்தொடர். இதன் மூன்று  பாகங்கள் இதுவரை தமிழ் தந்தி பத்திரிகையில் வெளிவந்துள்ளன.இச்சிந்தனையை தூண்டி வாய்ப்பளித்த  சுகந்தன் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.)


Add caption

சரித்திரங்கள் தானாக பிறப்பதில்லை அவை உருவாக்கப்படுகின்றன. ஒரே பாதையில் செல்லும் உலகை மாற்றி புதுமை படைப்பவனே சரித்திர நாயகனாக வரலாற்றில் இடம்பெறுகிறான்.அந்த வகையில் சிறந்த இசை மற்றும் பாடலுக்கான உலகின் தலைசிறந்த விருதான இரண்டு ஆஸ்கார்கள்,இரண்டு கிராம்மி விருதுகள்,தலா ஒவ்வொரு கோல்டன் க்லோப்,பஃப்டா விருதுகள் போன்ற உலக விருதுகளோடு இந்திய அரசின் நான்கு தேசியவிருதுகள்,தென்னிந்திய வட இந்திய சிறந்த இசைக்கான 28 பில்ம்ஃபேர் விருதுகள் உட்பட இசைக்கான 103 விருதுகள்,டைம் சஞ்சிகையின் அங்கீகாரம்,நோபல் மேடையில் இசைநிகழ்ச்சி,மியாமி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் இன்னும் எண்ணிலடங்கா சாதனைகள்  ஒரு இசைத்தமிழன் இவர். தாஜ்மகால் எப்படி இந்தியாவின் உலக அதிசயமோ அதே போல இவர் இந்தியாவின் இசை அதிசயம். இசைப்புயல்,ஆஸ்கார் நாயகன் என உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தியாவின் அடையாளம் ஏ,ஆர்.ரஹ்மானின் ஆரம்ப வாழ்க்கை பயணம் பற்றிய தேடலின் விழைச்சலே இந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்-ஆறிலிருந்து ஆஸ்கார் வரை.





சரித்திரத்தில் இடம்பிடித்த ஒவ்வொரு மனிதனும் வெளியுலகிற்கு  முதன்முதலில் தெரியவரும் போது அக்கணத்தில் கேட்கப்பட்ட கேள்வி ”யார் இவன்”?.இதே போல இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்தின் பாடல்கள் வெளிவந்து தேசியவிருது பெற்று இந்திய திரை இசையையே புரட்டிப்போட்ட போது இந்தியா திரையுலகே பிரமிப்போடு கேட்ட கேள்வி யார் இந்த ரஹ்மான்? 2009 ஆம் ஆண்டு ஆஸ்கார் மேடையில் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று ஒரு மனிதன் சொல்லி இரண்டு விருதுகளை வாங்கிய போது இந்த உலகமே கேட்ட கேள்வி யார் இந்த ரஹ்மான்?இந்த இசைப்பிரவாகத்தின் ஆரம்பகாலம் எப்படியிருந்தது? என்னென்ன சவால்களை எதிர்கொண்டார்? எதையெதை இழந்தார்? இவ்வுச்சத்தை தொட என்னென்ன உந்துதலாக இருந்தது இசைப்புயலின் வாழ்க்கை கடிகாரத்தை கொஞ்சம் முன்னோகி திருப்பி பார்ப்போம்.




சேகர்,கஸ்தூரி(இப்போது கரிமா) தம்பதியினருக்கு 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி  பிறந்தார்.ரஹ்மானுக்கு மூன்று சகோதரிகள். பிரபல பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷின் தாயர் ரெஹ்ஹானா ரஹ்மானின் சொந்த தமக்கையாராவார்.ரஹ்மான் என்று பிற்காலத்தில் அறியப்பட்ட இச்சிறுவனின் இயற்பெயர் திலீப்குமார்.திலீப்பின்(ரஹ்மான்) தந்தை ஆர்.கே சேகர் ஒரு பிரபல மலையாள இசையமைப்பாளர்.





இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.1964ஆம் ஆண்டு பழசிராஜா என்னும் மலையாள படம் மூலம் திரையிசைக்கு அறிமுகமானார் சேகர்(பின்னர் இப்படம் அண்மையில் மெருகேற்றப்பட்டு மம்முட்டியின் நடிப்பில் வெளிவந்து இசைஞானி இளையராஜாக்கு தேசியவிருது பெற்றுகொடுத்து).இப்படத்தில் மொத்தமாக 12 பாடல்கள் இடம்பெற்று இருந்தன. அக்காலத்தில் ஜேசுதாஸ் பாடிய ”சொட்ட முதல் சுடல வாறே” என்ற பாடல் மிக பிரபலம்.

இந்த பாடலை கேட்டுபாருங்கள் மொழி புரியாவிடினும்  எவ்வளவு உணர்வுபூர்வமானதயிருக்கும்.



 




ரஹ்மானின் தந்தையாரே சிறந்த குருவாக இருந்து இசை கற்றுக்கொடுத்தார். சேகர் ஹார்மோனியம் வாசிப்பதில் வல்லவர். எனவே மகனுக்கு இசைநுணுக்கங்களை திறம்பட கற்றுக்கொடுத்தார்.திலீப் சிறுவனாக இருக்கும் போதே ஹார்மோனியக் கட்டைகளை துணியால் மூடிவிட்டு வாசித்து கலக்கினான். இந்த ஹார்மோனிய
மே பின்னாளில் ஒரு கீபோர்ட் சக்கரவர்த்தியையே உருவாக்கிற்று.




திலீப் குமார் தன் தந்தை மீது பேரன்பு கொண்டிருந்தார்.இருப்பினும் அவனின் வாழ்க்கையில் முதல் அடி விழுந்தது.திலீப்புக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது தந்தை சேகர் 43 வயதில் திடீர்மரணம் எய்தினார்.தாய் மற்றும் சகோதரிகள் செய்வதறியாது தவித்தனர். இருப்பினும் திலீப்புக்கு இசையில் புதிதாகசாதனை படைக்கவேண்டும் என்ற தீராநோய் பற்றிக்கொண்டது. தந்தை இட்ட அடித்தளத்தை மேலும் பலப்படுத்த அடுத்த கட்டத்தை நோக்கி மனம் தளராமல் புறப்பட்டான்.அவனுக்கு தாயார் கஸ்தூரி(கரிமா) மிக உந்துதலாக இருந்தார்.”தந்தையின் இழப்பு பெரும் சோகத்தை தரினும் காலப்போக்கில் தன் தாயார் அல்லுபகலும் பாடுபட்டு தந்தை இல்லை என்ற உணர்வே இல்லாமல் தங்களை வளர்த்ததாக ரஹ்மான் அடிக்கடி சிலாகித்துகொள்வார்.பின்னாளில் வரலாறு படத்தில் ”தீயில்விழுந்ததேனா” பாடலை தனது தாய்க்கு சமர்ப்பித்து உருகி பாடியிருப்பார்.


ரஹ்மான் இன்றும் தன் தந்தையை மானசிகமாக நேசித்து வருகிறார். தனது வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு வேளையும் தந்தையின் படத்தை தரிசித்துசெல்வார்.

அடுத்த பாகத்தில் சந்திப்போம்...
இவன் இரோஷன் 

18/12/2012

இலங்கை இசைக்கலைஞர்களின் ORIENTAL MUSIC ORCHESTRA -2012



SRILANKA'S NATIONAL ORIENTAL  MUSIC ORCHESTRA என்ற இந்நிகழ்ச்சி COLOMBO ROYAL NORWEGIN EMBASSY  ஏற்பாட்டில்  இந்தவருடம் மார்ச்  6 ஆம் திகதி  கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த தமிழ்,சிங்கள மொழிகளை சேர்ந்த சிறந்த  நூறு இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.



இந்நிகழ்வை நேரில் பார்க்கமுடியவில்லை எனினும்  இந்நிகழ்வில் வயலின் இசைத்த யாழ் பல்கலைக்கழக நண்பி மூலம் சில மாதங்களிற்கு முன்னர் பார்க்க நேரிட்டது. மிகவும் அற்புதமான இசை ஒருங்கமைப்புடன் பாரம்பரிய இசை கருவிகளின் சங்கமத்தில் இவ் ஓர்கெஸ்ட்ரா ஒழுங்கமைக் கப்பட்டிருந்தது.  இலங்கையில் அதிகமான இசை இசை நிகழ்ச்சியை கண்டுகளித்திருப்பினும் இவ் ஓர்கெஸ்ட்ராவில் இசைக்கப்பட்ட அனைத்து இசை கோர்வைகளும் என்னை கட்டிப்போட்டுவிட்டன.அதன் பின்னர் இதை பற்றி பகிரலாம் என்ற எண்ணம் தோன்றியது.அது பற்றிய ஒரு தேடலில் கிடைத்தவையே இந்த பதிவு




இந்நிகழ்ச்சி இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் இசையை பிரதிபலிப்பதான ஒரு கலவையாக இருந்தது.இந்நிகழ்ச்சிக்கான வழிநடத்தலை INSTITUTE OF HUMAN EXCELLENCE AND ARU SRI ART THEATRE மேற்கொண்டிருந்தது.இந்நிகழ்ச்சிக்கான பிரதான ஆலோசகராக திருமதி கலாசூரி அருந்ததி சிறீரங்கனாதன் செயற்பட்டார். ஈழத்தின் புகழ்பெற்ற கலாவித்தகர் இவர். இவர்களின் முற்றுமுழுதான சுயவிபரம் சாதனைகள் விருதுகள் பற்றி இத்தளத்தில் அறியலாம்....

திருமதி அருந்ததி சிறீரங்கநாதன்
http://184.154.234.7/~arunthat/profile.html

தென்னிந்திய நடிகர் வினித்தால் கௌரவிக்கப்பட்டபோது
இந்நிகழ்ச்சிக்கான பயிற்சி ஆறு மாத காலங்களாக நடைபெற்று இறுதியில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. இலங்கையின் முன்னணி இசை 
கலைஞர்களான திருமதி அருந்ததி சிறீ ரங்கனாதன்,டாக்டர் நிர்மலாகுமாரி ரொட்ரிகோ,குமாரலியனவத்தே,சோமசிறி இலசிங்க, எஸ்.மகேந்திரன்விஜேரத்ன ரணதுங்க,டாக்டர் பாலாம்பிகை ராஜேஸ்வரன் போன்றவர்கள் இந்நிகழ்ச்சிக்கான பயிற்சியை வழங்கினர்.


இவ் ஓர்கெஸ்ட்ரா  முக்கியமாக தென்னிந்திய கர்நாடக இசையை பிரதிபலிக்கும் முகமாகவும் இசைக்கருவிகள் நரம்புவாத்தியங்களே அதிகம் இசைக்கப்பட்டன. மேலும் தமிழரின் பாரம்பரிய தனித்துவ வாத்தியங்களான தவில்,நாதஸ்வரம்,மிருதங்கம் உட்பட சித்தார், சாரங்கி, சரோட், எஸ்ராஜ்தில்ரூபா போன்ற ஹிந்துஸ்தானி இசைகருவிகள்,உருமி,தப்பு,பறை,மோர்சிங்,கஞ்சிரா,கடம்,சுத்தமத்தளம், 
கோட்டுவாத்தியம்,முரசு,கொம்பு,புல்லாங்குழல்,மோகன்வீணா,வயலீன்  
ஹார்மோனியம்தபேலா,சாந்தூர், போன்ற பல்வேறுபட்ட இசைகலாச்சாரங்களின் கோர்வையில் இந்நிகழ்ச்சி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இவ் ஓர்கெஸ்ட்ராவில் முதலாவதாக ஹம்சத்வனி ராகம்,ஆதி தாளத்தில் முத்துஸ்வாமி தீட்சிதர் அமைத்த வதாபி கீர்த்தனம் இசைக்கப்பட்டதுஇதற்கான நெறியாள்கையை கலாசூரி அருந்ததி சிறீரங்கனாதன் மேற்கொண்டிருந்தார்.இக்காணொளிகளை இங்கு பார்க்கலாம்.



இதற்கடுத்தபடியாக பாஷந் பைரவி ராகம்,த்ரீ தாளத்தில் ஹிந்துஸ்தானி இசை சங்கீத் விசாரட் சோமசிறீ இளசிங்க அவர்களின் நெறியாள்கையின் கீழ் இசைக்கப்பட்டது.



அடுத்தபடியாக  நியான் ஹி மால்கர் மற்றும் ராக பஹார் ராகத்தை தழுவி டாக்டர் நிர்மலா குமாரி அவர்களின் இசைநெறிபடுத்தலில் மேலும் ஒரு  ஹிந்துஸ்தானி  இசைகோர்வை வாசிக்கப்பட்டது.



அதன் பின்னர் குமார லியனவத்த அவர்களின் நெறியாள்கையில் சிங்கள கிராமிய இசை கருவிகளான கட்டா பெரா,பஹாதரட்ட பெரா,சப்ரகமூவ பெரா போன்றவற்றுடன் கர்நாடக இசைகருவிகளின் கலவையில் சிங்கள கிராமிய இசை வாசிக்கப்பட்டது.மிகவும் வித்யாசமான ஒரு அனுபவமாக இது இருந்தது.



 மேலும் இறுதியாக  இந்திய ராகங்களின் கோர்வையான  கர்நாடக ராகமாலிகை ஒன்றை கர்நாடக்கிராமிய இசையுடன் கலாசூரி அருந்ததி சிறீரங்கநாதன் அவர்கள்   நெறியாள்கை செய்திருந்தார்.



நிகழ்ச்சியின் இறுதியில் பங்களாதேஷ்,பலஸ்தீன்,நோர்வே இசை கலைஞர்களின் இசைநிகழ்வும் நடைபெற்றது.இறுதியாக இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திமுடிக்க காரணமாகவிருந்த அனைத்து கலைஞர்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட பல்வேறு சமுகத்தை ஒன்றிணைக்கும் இசைநிகழ்சிகள் மிகவும் வரவேற்கத்தகது.இந்நிகழ்ச்சியை சிறப்புறநடாத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 இந்நிகழ்ச்சி பற்றிய தகவல் தந்து உதவிய நண்பிக்கு என் நன்றிகள்.


-இவன் இரோஷன்-


16/12/2012

ரஹ்மானின் மீள்வருகை-கடல் பாடல்கள்



ஆரம்பகாலத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இசைவெளியீட்டு விழா என்று நடத்தி வெளியிடுவார்கள்.ஆனால் அண்மைக்காலத்தில் சிங்கிள் ட்ராக்ஸாக  வெளியிட்டு ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பை கூட்டி முற்றுமுழுதான பாடல்களை வெளியிடுவது என்று ஒரு சம்பிரதாயம் தமிழ் சினிமா இசையில் தோன்றியுள்ளது.அதை மிக அழகாகவும் வெற்றிகரமாகவும் ரஹ்மான்&மணிரத்னம் கூட்டணியினர் செய்து காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர்.இது ஒரு திரைப்படத்துக்கான ஒரு மறைமுக விளம்பரமாக இருப்பினும் இசைரசிகர்களுக்கு இவை கொண்டாட்டம் என்றே சொல்லாம். நெஞ்சுக்குள்ளே பாடல் ஆரம்பத்தில் வந்தது பின்னர் ஏலே கீச்சான் இப்போது பாடல்கள் அனைத்தும் வெளிவந்துவிட்டன.ஆனால் ஒவ்வொரு பாடல் வரும் போதும் கடல் திரைப்படம் மீதான எதிர்பார்ப்ப்பு உச்சத்துக்கு சென்றுவிட்டது.  மணிரத்னம் கடல் படத்துக்கான விளம்பரத்தை ஆஸ்கார் நாயகன் மூலம் அழகாக ஆரம்பித்துள்ளார்.ஒட்டு மொத்தமாக 7 பாடல்கள்வைரமுத்து,கார்க்கி தலா 3 பாடல்களும் ஈழத்தை சேர்ந்த தினேஷ் தனது ராப் பாடலையும் எழுதியுள்ளனர்.இந்த ஆல்பத்தில் ரஹ்மான் அனேகமாக புதிய பாடகர்களையே பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.ஹரிணீ,விஜய் ஜேசுதாஸ்,சின்மயி,ஹரிசரண் போன்றோரை தவிர மற்றய பாடகர்கள் அனைவரும் அனேகருக்கு பரிச்சயமில்லாத ரஹ்மானின் கண்ணில் தட்டுப்பட்ட திறமைசாலிகள்.ஏற்கனவே கடல் பாடல்கள் பற்றிய எதிர்வுகூறல்களை இசைப்புயலின் நெஞ்சுக்குள்ள-MTV UNPLUGGED-கடல் பாடல்கள்.......     பதிவில் பகிர்ந்திருந்தேன்.
னது பார்வையில் கடல் பாடல்கள் எப்படி இருக்கிறது மற்றும் புதிய பாடகர்கள் யார் யார் என்பது பற்றிய ஒரு பதிவே இது....


கடல் பாடல் இசை 




 சித்திரை நிலா

பாடியவர்-விஜய் ஜேசுதாஸ்


பாடல் வரிகள்-வைரமுத்து

விஜய் ஜேசுதாஸின் இசைபயணத்துக்கு ஒரு மகுடமான பாடல் எனலாம்.விஜய் ஜேசுதாஸ் ஏற்கனவே சிவாஜி  படத்தில் ரஹ்மான் இசையில் சஹானா பாடல் பாடியிருந்தாலும் படத்தில் விஜய் ஜேசுதாஸ்குரலில் இடம்பெறாததால் மிகவும் வருத்தமடைந்திருந்தார்.அதன் பின்னர் இந்த வாய்ப்பு விஜய் ஜேசுதாஸுக்கு நிச்சயம் திருப்தியளிக்ககூடியதாயிருக்கும். ரஹ்மான் இவ்வளவுநாளா ஏன் இப்பிடி பாட்டு கொடுக்கல்ல என்று கேட்க தோன்றும்  தாலாட்டும் பாடல்.ரஹ்மானின் தொண்ணூறு காலப்பகுதியில் வந்த மென்மையான பாடல்களில் உள்ள உயிர் இப்பாடலில் உள்ளது.இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த உருக்கமான பாடல்.வைரமுத்துவின் நம்பிக்கை ஊட்டும் வரிகள் அழகு.பாடலின் பின்னணியி வரும் வயலீன்,புல்லாங்குழல் மயக்கும்.மரமொன்று விழுந்தால் என்று வரும் கோரஸ் நிச்சயம் உணர்ர்சியை தூண்டும்.



. *****************************************************************************
மூங்கில் தோட்டம்

பாடியவர்கள்-அப்ஹே,ஹரினி

பாடல் வரிகள்-வைரமுத்து

அப்ஹே&நீதி மோகன்
புதியவர் அப்ஹே&ஹரினி குரலில்  இன்னுமொரு அழகான மெலோடி பாடல் அப்ஹே ஏற்கனவே ரஹ்மான் இசையில் கன்னட கோட்ஃபாதர் படத்தில் பாடலை பாடியுள்ளார்.


மேலும் கொஞ்சம் காஃபி கொஞ்சம் காதல் படத்தில்உயிர் உயிர் தோழாபாடலை சக்திசிறீகோபாலனுடன் பாடியுள்ளார்பாடலின் பின்னணியில் வரும் கிட்டார் ஸ்ரிங்ஸ் பியானோ, வயலீன் மென்மையாக தாலாட்டிசெல்லும்.ஹரிணி நீண்டகாலத்துக்கு பின்னர் ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.கொளத்தாங்கரையில குளிக்கும் பறவைகள் என்று தன்னோட ப்ரஷான குரலில் ஆரம்பிக்கும் போதும்இது போதும் எனக்கு இது போதுமேன்று உருகும் போது பாடலை உச்சத்துக்கு கொண்டுசொல்கிறார். பாடல் வரிகள் சொல்லவே தேவையில்லை வைரமுத்து அழகான காதல் பாடலை இயற்கையுடன் சொல்லியுள்ளார்.இந்த பாடலை கேட்கும் போது ரஹ்மானை பார்த்துஇது போதும் எனக்கு இது போதுமேஎன்று சொல்லத்தோன்றும் அவ்வளவு அழகான மெலோடி.இப்படிப்பட்ட பாடல்களுக்காக எவ்வளவு நாள் காத்திருந்தோம்.

06/12/2012

வைரமுத்து+ஜீ.வீ =பரதேசி பாடல்கள்


தமிழ் திரையுலகே மிக ஆவலுடன் எதிர்பார்துக்கொண்டிருக்கிறது பாலாவின் புதிய படைப்பான பரதேசி திரைப்படத்தை.இதுவரை பாலாவின் படங்களுக்கு இசைஞானியும்(சேது,பிதாமகன்,நான்கடவுள்) யுவனுமே(நந்தா,அவன் இவன்) இசையமைத்து வந்தனர்.இத்திரைப்படத்துக்கு அண்மைக்காலமாக கலக்கிவரும் ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பின் ஜீ.வி இசையமைக்கும் ஒரு மிகபெரிய படம் என்று இதை சொல்லலாம்.இதுவரை பாலா,இளையராஜா கூட்டணி மிக அருமையான பாடல்களை கொடுத்து இருந்தது.இறுதியாக நான் கடவுள் திரைப்படத்துக்கு இசைஞானியின் அபாரமான இசை வெகுவாக பேசப்பட்டது.
ஆனால்  இத்திரைப்படத்துக்கு ஒரு மாற்றத்துக்காக ஜீ.வீ தெரிவுசெய்துள்ளார். வசந்தபாலன் மூலம் வெயில் படத்தில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்தில் 25 படங்களுக்கு இசையமைத்திருந்த ஜீ.வீ இன் 26வது படம் இது பாடல்கள் அனைத்தையும் பாலாவுக்கு முதல் முறையாக வைரமுத்து எழுதியுள்ளார்.
பரதேசி பாடல்கள் என் பார்வையில் எப்படி வந்துள்ளன என்பதை எனக்கு பிடித்தபாடல் வரிசையில் தருகிறேன்.


1.”
ஓர் மிருகம்

பாடிவர்கள்-பிரசன்னா&பிரகதி

இப்பாடலே இந்த ஆல்பத்திலே எனக்கு மிகவும் பிடித்தது. சோகம் இழையோடும்  அழகான பாடல்.சூப்பர் சிங்கர் பிரகதிக்கு ஒரு அட்டகாசமான  அறிமுகப்பாடல் இது.ஆரம்ப ஆலாபனையாக இருக்கட்டும்யாத்தே காலக்கூத்தேஎன்று பாட ஆரம்பிக்கும் போது சரி  .”எங்கோ தவிக்கும் என் பிள்ளையேஎன்ற வரிகளை பாடும் போது சரி பிரகதி ஒரு முதிர்ச்சி அடைந்த பாடகி போல தெரிகிறார்.நான் அதிகம் ரசிக்கும் பாடகர்களில் ஒருவர் பிரசன்னா.ஆனால் அதிக பாடல்கள் பாடுவதில்லை.இருப்பினும் இப்பாடலில் பிரசன்னா பாடும் இடங்கள் சொல்லவார்த்தை இல்லை.ஒரு வலியை பாடல்மூலம் உணர்வாக கொடுக்கிறார்.
பாடலுக்கு இடையில் வரும் இரண்டு  INTERLUDE’S அற்புதம்.இப்பாடலை கேட்கும் போது படத்தின் காட்சி  எப்படி இருக்கும் என்று யூகிக்ககூடியதாக உள்ளது.ஒரு பாலா படத்துக்கான பாடல் எப்படி இருக்கவேண்டுமோ அதிலிருந்து சற்றும் பிசகாமல் வந்திருக்கிறது இப்பாடல். இப்பாடலை  ஜீ.வீ இன் இசையை விட வைரமுத்துவின் வரிகள் தான் உச்சத்துக்கு கொண்டு செல்கின்றனஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை தன் அடிமை செய்வதுமில்லை.ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை”“வழி சொல்லவே இல்லையே வாய் மொழி கண்ணீரு தான் ஏழையின் தாய் மொழிபோன்ற வரிகள் அற்புதம்.ஆனால் இந்தப்பாடலின் மெலோடியை தூக்கிவிட்டுபெம்மானேபாடலின் மெலோடியை பிரதியிட்டு பாருங்கள்.பின்னணி இசைக்கு அப்படியே பொருந்தும்.

2.”தன்னைத்தானே

பாடியவர்-கானா பாலா

நடுக்கடலில கப்பல எறங்கி தள்ளமுடியுமாஎன்ற ஒரு அருமையான தத்துவபாடலை பாடி இளைஞர்களின் பெரும் ஆதரவைபெற்ற கானா பாலா இப்பாடலை பாடியுள்ளார்.இவர் இப்பாடல் ஒரு கிறீஸ்தவ கானா பாடல் வகையில் அமைந்துள்ளது.கானா பாலா திரை இசைக்கு வருவதற்கு முன்னர் கிறீஸ்தவ பாடல்கள் பல பாடிவெளியிட்டது குறிப்பிடவேண்டியது.
கானா பால பாடிய “பரலோகம்” என்ற கிறீஸ்தவ பாடலை கேட்க......
நல்ல ஒரு பாடகர் தெரிவு.நிச்சயமாக அனைவரையும் ஆடவைக்கும் இப்பாடல்.”ஆலேலூயா ஆலேலூயாஎன்ற கோரஸில் கானா பாலாவின் குரலின் நெகிழ்வு அருமை.மிக அனுபவித்து பாடியுள்ளார்.நீர் பறவை பாடல்களுக்கு பின்  வைரமுத்து எழுதிய கிறீஸ்தவ சமயத்துடன் சார்ந்த இன்னொரு பாடல்.


3.“அவத்த பையா

பாடியவர்கள்-வந்தனா சிறீனிவாசன்,யாஷின்

இந்த ஆல்பத்ல இருக்கிற ஒரேயொரு காதல் பாடல். ஜீ.வீ இன் இசையில் வந்தனா பாடும் இரண்டாவது பாடல் இது.இவர் ஏற்கனவேஒரு பாதி கதவுஎன்ற அழகான மெலோடி பாடலை பாடியிருந்தார்.கிராமிய மணம் சொட்டும் ஒரு அழகான மெலோடி. புல்லாங்குழல்,வீணை போன்ற இசைகருவிகளின் சேர்க்கை அருமை.ஆண் குரல் யாசின் என்ற பாடகர் பாடியுள்ளார்.இருப்பினும் அவரது குரலில் ஜீ.வீ இன் பாதிப்பு தெரிகிறதுஇப்பாடலிலும் வைரமுத்து தனது காதல் மொழியை எழுதியுள்ளார்.பாடல் வரிகளில் கிராமத்து வார்த்தைகள் அழகாக கையாண்டுள்ளார்.சர சர சாரக்காத்து பாடலுக்கு பின்னர் வைரமுத்துவின் இன்னொரு கிராமத்து காதல் பாடல் எனலாம்.
                                 

4.” செங்காடே

பாடியவர்கள்-மதுபாலகிருஷ்ணன்,பிரகதி

செங்காடே சிறு கரடே போய்வரவாஎன்று தனது காந்தகுரலால் மதுபாலகிருஷ்ணன் பாடும் போதே பாடலின் போக்கு புரிந்துவிடும்.பாடல் வரிகளில் அத்துணை வலிகளும் உணர்வுகளும் கோர்க்கப்பட்டுள்ளது. இப்பாடலிலும் வைரமுத்துவே தெரிகிறார்.வழமையாக பாலா படங்களில் வரும் இருட்டு வாழ்க்கை வாழும் மக்களின் நிலையை எடுத்தியம்பும் ஒரு பாடல். “கங்காணி பேச்சை நம்பி சனம் போகுதே நண்டுகள் கூட்டிகொண்டு நரி போகுதேபோன்ற வரிகள் இப்பாடலின் இன்னொரு பரிமாணம்.இந்த ஆல்பத்திலே மிக அற்புதமான வரிகள் அமைந்த பாடல் இது.


5.“செந்நீர் தானா

பாடியவர்-’கங்கை அமரன்”,ப்ரியா ஹிமேஷ்

பாலா படத்தில் வரும் அந்த இளையராஜா எஃபக்ட் இப்பாடல். ”பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடலின் அகத்தூண்டுதல் எனவும் சொல்லலாம்.இசைஞானி இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கங்கை அமரனை வைத்து இப்பாடலை பாடவைத்துள்ளனர்.ஒவ்வொரு வரிகளும் முதலாளித்துவ வர்க்கத்தால் வெயில்மழை என்று பாராது உழைக்கும் ஏழைகள் படும் துன்பத்தை பாடலாக்கியுள்ளார் வைரமுத்து.




மொத்தத்தில் ஜீ.வீ பிரகாஷின் திரை இசை வரலாற்றிலே மதராசபட்டணம் பாடல்களுக்கு அடுத்ததாக நான் அதிகம் ரசித்தது பரதேசி பாடல்களையே ஆகும்.மேலும் இதுவரை ஜீ.வீ இசையில் வந்த பாடல்களில் அதிகம் உணர்வுகளை கோர்த்த பாடல்கள் இவை.இவற்றை விட வைரமுத்துவின் அனுபவ வரிகள் பாடல்களை எங்கோ கொண்டு போய் சேர்க்கிறது.பாடல் வரிகள் படத்தோடு மிக ஒன்றியவையாக இருக்கின்றன.பாலா இதுவரைகாலமும் இசைஞானி கூட்டணியில் இயங்கியமையால் வைரமுத்துவுடன் கைகோர்க்க முடியவில்லை. இப்படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது.
பாடல்களை கேட்கும் போது வைரமுத்துவிற்காகவே ஜீ.வி.பிரகாஷ் இப்படத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு இருக்கலாம்.வழக்கமாக பால படங்களின் ஓடியொவில் 5,6 பாடல்கள்வரும் ஆனால் படத்தில் ஒரு சில பாடல்களே தேவைக்கேற்ப பயன்படுத்தபடும். ஆனால் இத்திரைப்படத்தில் காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னரே பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஜீ.வீ. இது பாலா போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு ஆரோக்கியமான ஒரு நடவடிக்கை ஆகும்.படத்தோடு பார்க்கும் போது பாடல்கள் இன்னும் உயிருள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதுவரை பாலா படங்களில் பணியாற்றிய நடிகர்களிலிருந்து தொழிநுட்பக்கலைஞர்கள் வரை தேசியவிருதுகளை வாங்கி குவித்திருக்கின்றனர்.ஆனால் பாலாவின் படங்களுக்கு  இசையமைப்புக்கோ பாடல் வரிகளுக்கோ தேசியவிருது கிடைக்கவில்லை.இப்பாடல்கள் மூலம் அது நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!!!

இவன் இரோஷன்.