02/05/2013

எதிர்நீச்சல்- திரைவிமர்சனம்


நடிகர்கள்-சிவகார்த்திகேயன்,ப்ரியா ஆனந்த்,நந்திதா,சதீஷ்,ஜெயபிரகாஷ்
இசை-அனிருத்
ஒளிப்பதிவு-வேல்ராஜ்
எடிட்டிங்-கிஷோர்
எழுதி இயக்கியவர்-துரை செந்தில்குமார்
தயாரிப்பு-தனுஷ்

சுமாரான கதையும் சிவகார்த்திகேயனினதும் பரோட்டா சூரியினதும்   சரவெடிகள் ஆங்காங்கே இருந்ததாலும் வெற்றிக்கொடியை நாட்டிய
கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கு பின்னர் சிவகார்த்திகேயன் சோலோ ஹீரோவாக நடித்துவெளிவந்திருக்கும் படம் எதிர்நீச்சல்.
சிவகார்த்திகேயனின் பாட்டி வைத்த குஞ்சிதபாதம் என்ற பெயரால் தன் வாழ்கையில் அனேக சந்தர்ப்பங்களில் அசிங்கப்படும் சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரீஷ் என்று மாற்றிக்கொள்கிறார்.அதன் பின் அவர் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் எதிர்நீச்சல்.சின்ன சின்ன விசயங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
இந்த ஒன்லைனை  வைத்து ரசிக்கவைக்கும் காமடி,செண்டிமண்ட்,கொஞ்சம் அலட்டல்கள்,கலக்கலான பாடல்களுடன் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குமர் துரை செந்தில்குமார்.

சிவகார்த்திகேயன்.

குஞ்சிதபாதம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அவஸ்தை படுவதாக இருக்கட்டும்,ஓனரின் குண்டுப்பையனை வைத்து ப்ரியா ஆனந்தை லவ்வுவதாக இருக்கட்டும் முற்பாதியில் காமடியில் அசத்துகிறார்.பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி, பாடிலாங்குவேஜ்,காஷ்டியூம்ஸ் எல்லாவற்றிலும் கொஞ்சூண்டு ரிச் லுக் தெரிகிறது.இப்படியே போனால் அடுத்த படத்தில் சீ.பீ,ஐ ஆபீசராகவும் நடிக்கலாம் இவர்.ஆனால் பிற்பாதியில் ஓட்டவீரனாக ஸ்கோர் செய்யவேண்டிய இடங்களில் கொஞ்சம் சொதப்பிவிட்டாரோ என எண்ணத்தோன்றியது.அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக ஒரு ஓட்டவீரனின் பாடிலாங்குவேஜ்ஜை ஸ்ரடி பண்ணியிருக்கலாம்.

அனிருத்.

 இந்த படத்தோட இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம்.ஐந்து,ஆறு மாதங்களுக்கு முன்னரே பாடல்கள் வந்து பாக் டூ பாக் ரேடியோக்களில் ஒலித்து இப்படத்துக்கு நல்ல ஒரு பப்லிசிட்டியை கொடுத்திருந்தது. “வெளிச்சப்பூவே” மெலோடியாக இருக்கட்டும் “பூமி என்ன சுத்துதே” ,”ஸ்பீடு ஸ்பீடு” ,”நிஜமெல்லாம் மறந்துபோச்சு”,பாடல்கள் எல்லாமே கலக்கல். அதிலும் வெளிச்சப்பூவே பாடல் அவ்ளோ அழகாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.அனிருத்தும் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
”லோக்கல் பாய்ஸ்” பாடல் வலிந்து திணிக்கப்பட்டு இருப்பினும்  தனுஷ்,சிவா,நயந்தாரா என்று குத்தாட்டத்தில் பின்னிபெடலெடுத்திருந்தனர்.
பின்னணி இசையில் ஒரு முதிர்ச்சியான ஒரு இசையமைப்பாளர் போல செயற்பட்டுள்ளார்.இனிவரும் காலங்களிலும் பின்னணி இசையில் கவனம் செலுத்தினால் நல்ல எதிர்காலம் இருக்கு.

ப்ரியா ஆனந்த்&நந்திதா.

 

முற்பாதியில் ரீச்சராக சிவகார்த்திகேயனின் வெளிச்சப்பூவாக விதவிதமான சாறிகள் அணிந்து மனசில் ஒட்டிக்கொள்கிறார் ப்ரியா ஆனந்த்.
அதிலும் வெளிச்சப்பூவே பாட்டில் பொண்ணு அப்டி ஸ்கோர் செய்திருக்கு.
180 படத்திற்கு பிறகு நேரடி தமிழில் ப்ரியா ஆனந்துக்கு நல்ல ஒரு ஸ்கோப் எதிர்நீச்சல் மூலம் கிடைக்கவாய்ப்புண்டு. பிற்பாதியில் வழமையான ஹீரோயின்கள் செய்வது போல ரெண்டு சீன்களில் தலைகாட்டுகிறார்.

பணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாகவும், சிவகார்த்திகேயனுக்கு கோச்சாகவும் பிற்பாதியில் முழுக்க வருகிறார் நந்திதா.அட்டகத்தி படத்துக்கு பின்னர்   நல்ல ஒரு கரக்டர் அளவான நடிப்பைகொடுத்திருக்கிறார்.

வேற என்ன....???

சிவாவின் நண்பனாக வரும் சதீஷ் கிடைக்கும் காட்சிகளிலெல்லாம் பின்னியிருக்கிறார்.அதிலும் குறிப்பாக மதன் பாப்பை கலாய்க்கும் காட்சிகள் அருமை.சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களிலும் ஒரு காமடி ட்ரெண்டை உருவாக்கலாம்.மனோபாலா ஒரு காட்சியில் வந்தாலும் வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறார்.அதுவும் கேசவன் என்ற பெயர் K7 ஆயிருப்பதால் K9(கேனையன்) ஆக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்று பீலா விடுவது அதன் பின்னர் வரும் சீனும் கலக்கல்.சிவாவை ஆரம்பத்திலே ஒரு மரதனோட்ட வீரனாக காட்டுவது பிற்பாதி லாஜிக்கிற்கு கொஞ்சம் உதவியிருக்கிறது.

இவற்றைவிட அண்மையில் வைத்திய பரிசோதனையில் ஆண் என நிருபிக்கப்பட்டு பதக்கங்கள் பறிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை பிங்கி பற்றி ஒரு செய்தி படித்திருப்போம். இந்த ஒரு வரிச்செய்தியை கொஞ்சம் மாற்றியமைத்து நந்திதாவின் கரக்டரை உருவாக்கிய இயக்குனருக்கு சபாஷ்.

இன்றைய இளைஞர்கள் தமக்கு தம் பெற்றோர்கள் வைக்கும் பெயரை ஆங்கில கலப்புடனும்,ஸ்டைல் என்ற பெயரில் வேற்றுமொழிகளையும் கலந்து பெயர் மாற்றம் செய்வது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த பேஸ்புக்கில் இது போன்ற கண்றாவிகளை காணலாம்.
ஆனால் நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் என்பது நம் சந்ததியின் அடையாளம் என்றும் பெயர் மாற்றுவதை விட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்னும் அழகான சமுகக்கருத்தை நகைச்சுவை, செண்டிமண்ட் கலந்து சொன்னதற்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.


இப்படி பிளஸ்கள் இருந்தும் பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது.
அனைத்தும் ஏற்கனவே சலிப்பூட்டிய ஊக்கிக்ககூடிய காட்சிகளாக கோர்க்கப்பட்டுள்ளது.சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என தோன்றுவதை தடுக்கமுடியவில்லை.
அந்த கிளைமாக்ஸ் 10 நிமிடகாட்சிகள் எப்படியோ படத்தை முடிக்கவேண்டும் எனும் நோக்கில் செயற்கை தனமாக நகர்கின்றன. சிவாவை மரதன் ஓட்டப்பந்தய வீரனாக ஜீரணிக்கமுடியவில்லை. அப்படியொரு செயற்கைதனம்.நந்திதாவின் கோச்சாக வரும் ஜெயபிரகாஷ்,பணக்கார கோச்சாகவரும் ரவி பிரகாஷ் வழமையாக படங்களில் பார்த்து சலித்த கரக்டர்கள்.ஜெயபிரகாஷ் போன்ற ஒரு திறமையான நடிகர் இவ்வாறான கரக்டர்களை தவிர்க்கலாம்.முற்பாதியில் திடீரென்று தான் ஏதும் சாதிக்கவேண்டும் என்று கண்சிவந்து சிவா கிளம்புவது பிற்பாதிக்கான வழியாக இருப்பினும் ஒட்டவில்லை.இவற்றை கொஞ்சம் சரி செய்திருந்தால் எதிர்நீச்சலை மொத்தமாக இன்னும் கொண்டாடியிருக்கலாம். இருப்பினும் இயக்குனர் எதிர்நீச்சல் மூலம் சிவகார்த்திகேயனை வெற்றிகரமான சோலோ ஹீரோவாக ஒரு படி மேல் கொண்டு வைத்திருக்கிறார்.


வன் இரோஷன்.









01/05/2013

ஆனந்த யாழை மீட்டும் யுவனின் தங்கமீன்கள் பாடல்கள்.



சில மாதங்களுக்கு முன்னர் ”கற்றதுதமிழ்” ராம் அவர்களின் “தங்கமீன்கள்” ட்ரெய்லர் வந்திருந்தது.அந்த ட்ரெய்லரில் வரும் உணர்ச்சிபூர்வமான வசனங்களையும் காட்சிகளையும் பார்த்தபோது அது ஒரு படத்துக்கான முன்னோட்டம் போல தெரியவில்லை.மூன்று நிமிடங்களில் ஏதோ ஒரு உணர்ச்சிபூர்வமான புது உலகில் பயணித்த மயக்கம். யூ ரியூப்பில் பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டும்,தங்கள் ஆதரவையும் வழங்கியிருந்தனர்.இந்த ட்ரெய்லருக்கு யூரியூப்பில் இடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களை பார்த்தபோது ஒரு படைப்பாளியால் எவ்வளவு தூரத்திற்கு ஒருவரின் மனதின் ஆழம் வரை செல்லலாம் என்பதை அறிந்துகொண்டேன். தங்கமீன்கள் படத்தின் ட்ரெய்லரில் ஆனந்தயாழை மீட்டுகிறாயடி” என்று ஒரு பாடல்வரும் அதைகேட்டதிலிருந்தே  பாடல்களுக்கு காத்திருக்க தொடங்கிவிட்டேன்.


அத்தோடு கற்றது தமிழ் ராம் அவர்களின் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இன்னொரு முகத்தை காணலாம் என்ற பூரணநம்பிக்கை இருந்தது. ராம்&யுவன் ஏற்கனவே “கற்றது தமிழ்” படத்தில் கைகோர்த்திருந்தனர்.கடந்த 10  ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான கற்றது தமிழ் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் உயிரோட்டமான பாடல்களும் படத்தை இன்னொரு படிமேல் கொண்டு சென்றது என்றால் மிகையாகாது. என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

இப்போதும் நா.முத்துகுமார் வரிகளில் “பறவையே எங்கு இருக்கிறாய்” .”பறபற பட்டாம்பூச்சி” “இன்னும் ஓர் இரவு”, “உனக்காக தானே” பாடல்களை கேட்கும் போது நெஞ்சம் கனக்கும்.நீண்டநாள் காத்திருப்பின் பின்னர் இன்று தங்கமீன்கள் பாடல்களை தரவிறக்கி கேட்டேன்.மிகவும் பிடித்துவிட்டது. இந்த ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்.இந்த பாடல்கள் அனைத்தையும் நா.முத்துகுமார் எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் இயக்குனர் ராம் அவர்களின் குரலில் உணர்ச்சிபூர்வமான வசனங்கள் வரும் அதன் பின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும்.

னந்த யாழை மீட்டுகிறாயடி”

பாடியவர்-சிறீராம் பார்த்தசாரதி
.
இயக்குனர் ராமின் குரலில்”மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை  என்று” என்ற அழகான வசனத்துடன் பாடல் ஆரம்பிக்கும்.
இந்த பாடலை பற்றி என்ன சொல்ல இந்த பதிவை எழுத தூண்டியதே இந்த பாடல் தான்.ஒரு பாடலில் உயிர் இருக்கிறது என்பார்கள்.அதை அறிந்திராதவர்கள் இந்த பாடலை கேளுங்கள்.இந்த பாடலை கேட்டு யுவன் என்னோட மகன் என்று இசைஞானி நிச்சயம் பெருமைப்படலாம்.
சிறீராம் பார்த்தசாரதி தமிழில் இடையிடையே தலைகாட்டிச்செல்லும் மிக திறமையான பாடகர்.ரஹ்மான் அவர்களால் “அதிசய திருமணம்” பாடல் மூலம் அறிமுகமாகி  ஏற்கனவே இளங்காத்து வீசுதே,சுட்டும் விழிச்சுடரே,வெண்பனியே,புதுமலர்த்தோட்டத்திலே போன்ற மிக பிரபலமான பாடல்களை பாடிவர். இந்த பாடல் மூலம் நிச்சயம் மறக்கமுடியாத பாடகராகிவிட்டார்.நா.முத்துகுமார் மீண்டுமொரு தடவை தன் பேனாவால் உணர்வுகளை கொட்டிசென்றுள்ளார்.ஒவ்வொரு வரிகளும் மிக அருமை.

 பாடல்வரிகள்:

னந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாயதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாசைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் மலையின் அழகோ தாங்கவில்லை
உந்த கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லையென்று தோன்றுதடி

தூரத்துமரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்தே பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லையென்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்....

உன்முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லையென்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.....


ஒரு தந்தை தன் மகளின் குழந்தைத்தனத்தை அவள் குறும்பில் கிடைக்கும் இன்பத்தை இதை விட வேறு எப்படி பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் பாடமுடியும்.
என்னைபொறுத்தவரை எனது கணிப்பில் இதுவரை வந்த பாடல்களில்  இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல் இது.



தி வெள்ளம்”

 பாடியவர்-ராகுல் நம்பியார்

”அப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள் மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்  ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை”
இவ்வாறு ராமி அவர்களின் குரலுடன் பாடல் தொடங்கும்.
ராகுல் நம்பியார் பாடியுள்ளார். இவர் ஏற்கனவே இதே கூட்டணியில் “கற்றது தமிழ்” படத்தில் “பற பற பட்டாம்பூச்சி” என்ற அழகான் பாடலை பாடியிருப்பார். பொதுவாக குத்துபாடல்களையே பாடும் ராகுல் நம்பியார் இப்படிப்பட்ட பாடல்களையும் பாடினால் நன்று.
தந்தை தன் மகளை பிரிந்து தவிக்கும் போது பாடும்பாடலாக அமைந்துள்ளது.
ஆனந்த யாழை மீட்டுகிறாயடி பாடலுக்கு அடுத்தபடியா என்னை கவர்ந்தது.
”அலைந்திடும் மேகம் அதை போல இந்த வாழ்க்கையே காற்றின் வழியில் போகின்றோம்.
கலைந்திடும் கோலம் என்ற போதிலும் அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்”
போன்ற வரிகள் வழமையான முத்துக்குமார் ரகமாயிருப்பினும்,
”மலரொன்று வீழ்ந்தால் அதை ஏந்த  பலர் ஓடுவார் இலைகள் வீழ்ந்தால் சருகாகும்.
வறியவன் வாழ்க்கை இலைபோல என்ற போதிலும் சருகுகள் ஒரு நாள் உரமாகும்”
போன்றவரிகள் அற்புதம். மேலும் பாடலின் இடையெ வரும் இடைஇசைகளும் மயக்கும்.

யாருக்கும் தோழன் இல்லை”

பாடியவர்-அல்போன்ஸ் ஜோசப்

“மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடகூடாது என்கிற வாழ்க்கையை தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்”என்ற வார்த்தைகளுடன் ஆரம்பிக்கும் பாடல்.ஆரோமலே பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் ஜோசப்பின் குரலில் அவருக்கேயுரிய பாணியில் இன்னொரு உருக்கமான பாடல். மகளின் விருப்பதை தீர்க்க முனையும் தந்தை ”சொன்ன தேதி சொன்னநேரம் உன்னை வந்து சேருவேன் இல்லையென்று ஆகும் போது என்னை நானே கொல்லுவேன்” பாடும்விதமாக 2.50 நிமிடம் ஒலிக்கிறது.

"First Last"

பாடியவர்கள்- பேபி சாதனா,பேபி சஞ்சனா

“அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஒரே இடம் பள்ளிக்கூடம் மட்டும் தான்” என்று ஆரம்பிக்கும் ஒரு ஜாலியான பாடல்.
இந்த பாடலை பாடிய பேபி சாதனா தான் இந்த தங்கமீன்களின் செல்ல மகள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த பாடலை கேட்கும் போது அழகி படத்தில் இடம்பெற்ற “டமக்கு டமக்கு டம்” பாடல் லைட்டாக வந்து போவதை தவிர்க்கமுடியவில்லை.பாடல் வரிகளை மிக குறும்பாக எழுதியுள்ளார் பாடலாசிரியர்.

யுவன் ஷங்கர் ராஜா அண்மைக்காலமாக மனதில் நிற்கும்படியான பாடல்களை  தருவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இசை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதற்கு “மூன்று பேர் மூன்று காதல்” இசை மூலம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திய யுவன் தங்கமீன்கள் பாடல்கள் மூலம் இன்னும் உயரம் சென்றுவிட்டார். பாடல்கள் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
தங்கமீன்களுக்காக காத்திருக்கும்,
வன் இரோஷன்.